/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வேன் மோதியதில் டிரான்ஸ்பார்மர் சாய்ந்தது
/
வேன் மோதியதில் டிரான்ஸ்பார்மர் சாய்ந்தது
ADDED : நவ 09, 2025 12:24 AM

திருப்பூர்: திருப்பூர் வளம் பாலம் வழியாக செல்லும் வாகனங்கள், நொய்யல்வீதி, பெரியகடை வீதி வழியாக காங்கயம் ரோடு செல்கின்றன; அங்கிருந்து வரும் வாகனங்களும், இதே வழியில் வருகின்றன. ஈஸ்வரன் கோவில் வீதி பாலம் பணி நடந்து வருவதால், வளம் பாலம் வழியாக வாகனங்கள் சென்றுவருவது பலமடங்கு அதிகரித்துள்ளது.
பெரியகடை வீதியில், ரோடும் குண்டும், குழியுமாக இருப்பதால், தடுமாறியபடி வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், நேற்று மதியம், பெரியகடை வீதியில் வந்து கொண்டிருந்த சரக்கு வாகனம் மோதியதில், ரோட்டின் தென்புறம் உள்ள டிரான்ஸ்பார்மர் சாய்ந்து ரோட்டில் விழுந்தது.
திடீரென டிரான்ஸ்பார்மர் சாய்ந்ததால், மக்கள் அலறியடித்து ஓடினர்; அதிர்ஷ்டவசமாக பாதிப்பு ஏற்படவில்லை. தகவல் கிடைத்ததும், ஒட்டுமொத்த மின்பணியாளர்களும் பெரியகடை வீதிக்கு சென்று, டிரான்ஸ்பார்மர் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து திருப்பூர் மின்கோட்ட செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது, ''பெரிய கடை வீதி டிரான்ஸ்பார்மரில் வேன் மோதி விபத்து ஏற்பட்டது குறித்து தகவல் கிடைத்ததும், அலுவலர்களும், பணியாளர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். போர்க்கால அடிப்படையில் பணி நடந்து வருகிறது,'' என்றார்.

