/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மொழி பெயர்ப்பு என்பது அறிவுக்கான பாலம்
/
மொழி பெயர்ப்பு என்பது அறிவுக்கான பாலம்
ADDED : செப் 28, 2024 11:13 PM
''சென்றிடுவீர் எட்டுத்திக்கும், கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்' என்று பாடினான் மகாகவி பாரதி.
தங்களது மொழி, கலாசாரம், பாரம்பரியம், வரலாறு போன்றவற்றை பிற மொழி பேசும், வெவ்வெறு கலாசசாரம், பாரம்பரியத்தை கொண்ட மக்களும் அறிந்துகொள்வதன் வாயிலாக தான், பரந்துப்பட்ட அறிவாற்றலை பெற முடியும். இதற்கெல்லம் வழிகாட்டியாக இருப்பது மொழி.
ஒரு மொழி, பிற மொழி பெயர்ப்பு செய்யப்படுவதன் வாயிலாக, அம்மொழியின் வளமையும், வனப்பும் கூடுகிறது. வெவ்வேறு மொழிகளின் வளர்ச்சியையும் புரிந்து, அதனை நமது மொழிக்குள் கொண்டு வருவதும், நமது மொழியின் சிறப்பை பிற மொழிகள் அறிந்து கொள்வதற்குமான ஒரு பாலமே மொழி பெயர்ப்பு. மொழி பெயர்ப்பின் அவசியம், முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக தான், ஆண்டுதோறும், செப்., 30ல், 'சர்வதேச மொழி பெயர்ப்பு தினம்' கொண்டாடப்படுகிறது.
'மொழி பெயர்ப்பு, பாதுகாக்க வேண்டிய கலை; பழங்குடி மொழிகளுக்கான தார்மீக மற்றும் பொருள் உரிமை' என்ற கருப்பொருள் முன்வைக்கப்பட்டிருக்கிறது.
மனசு விசாலப்படும்
சுப்ரபாரதி மணியன், எழுத்தாளர்: வெவ்வேறு நாடுகளுக்கு சென்று, அந்நாட்டு மக்களின் மொழி, கலாசாரம், பண்பாடு போன்றவற்றை அறிந்து கொள்ள முடியாது. ஆனால், மொழி பெயர்ப்பு வாயிலாக அவற்றை அறிந்துக் கொள்ள முடியும்; இதனால், மனம் விசாலப்படும். கலை, இலக்கியம் மட்டுமின்றி வியாபாரம் மற்றும் தொழில் ரீதியாகவும் ஒரு தொடர்பு கிடைக்கும். தற்போதைய குழந்தைகள் ஹிந்தி, சமஸ்கிருதம், பிரெஞ்ச், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளை கற்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். மருத்துவம், இலக்கியம், அறிவியல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறந்த மொழி பெயர்ப்பாளர்கள், 10 பேருக்கு, தமிழக அரசு, 2 லட்சம் ரூபாய் பரிசு வழங்கி ஊக்குவிக்கிறது.
எல்லை விரிவாகும்!
மணிவண்ணன், எழுத்தாளர்: தமிழ் சூழல் அறிந்த ஒரு உள்ளூர் எழுத்தாளர் மலையாளம் உட்பட பிற மொழி கவிதை உள்ளிட்ட படைப்புகளை மொழி பெயர்ப்பு செய்யும் போது, அந்த எழுத்தாளரின் எல்லை விரிவடைகிறது. அதே எழுத்தாளர், ஒரு ஆங்கில கவிதையை தமிழிலில் மொழி பெயர்க்கும் போது, அவர் உலக எழுத்தாளராக மாறுகிறார். அதாவது, ஒரு எழுத்தாளரால் உலக எழுத்தாளராக முடியாது.
ஆனால், ஒரு மொழி பெயர்ப்பாளரால் உலக எழுத்தாளராக முடியும். இரண்டு இனம், இரண்டு மொழி, இரண்டு பிரதேச எல்லைக்குட்பட்ட இலக்கியத்தை நிலை நிறுத்தும் விஷயமாக மொழி பெயர்ப்பு இருக்கிறது. மொழி பெயர்ப்பின் வாயிலாக தான் அந்த இலக்கியத்தின் தரம் தெரியும். அனைத்து திசைகளில் உள்ள கலை, இலக்கியம் உள்ளிட்ட அனைத்தையும் அறிந்துக் கொள்ள மொழி பெயர்ப்பு ஒரு பாலமாக இருக்கிறது.
- நாள் (செப்., 30) சர்வதேச மொழி பெயர்ப்பு தினம்!