/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூர் புறநகரில் 'டிரான்ஸ்போர்ட்' நகர் மிகமிக அவசியம்! பின்னலாடை உற்பத்தியாளர் எதிர்பார்ப்பு
/
திருப்பூர் புறநகரில் 'டிரான்ஸ்போர்ட்' நகர் மிகமிக அவசியம்! பின்னலாடை உற்பத்தியாளர் எதிர்பார்ப்பு
திருப்பூர் புறநகரில் 'டிரான்ஸ்போர்ட்' நகர் மிகமிக அவசியம்! பின்னலாடை உற்பத்தியாளர் எதிர்பார்ப்பு
திருப்பூர் புறநகரில் 'டிரான்ஸ்போர்ட்' நகர் மிகமிக அவசியம்! பின்னலாடை உற்பத்தியாளர் எதிர்பார்ப்பு
ADDED : செப் 16, 2025 11:32 PM

திருப்பூர்: நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், உற்பத்தியாகும் பின்னலாடைகளை, வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கவும் ஏதுவாக, புறநகரில் 'டிரான்ஸ்போர்ட்' நகர் அமைக்க வேண்டும் என, திருப்பூர் உற்பத்தியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
திருப்பூர் நகரப்பகுதி முழுவதும் இயங்கும், பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள், தயாரான சரக்கை, ரயிலில் வடமாநிலம் அனுப்புகின்றனர். பெரும்பாலும், கன்டெய்னர் லாரிகள் மூலமாக அனுப்பி வைக்கின்றனர். அதற்காக, தங்களது வாகனங்களில் சரக்கை ஏற்றி, கன்டெய்னர் அலுவலகங்களுக்கு சென்று ஒப்படைக்கின்றனர். இதனால், சரக்கு போக்குவரத்து நகரப்பகுதியில் குறைந்தபாடில்லை; நெரிசல் அதிகரித்து வருகிறது.
இந்நிலையை போக்க, புறநகரில், 'டிரான்ஸ்போர்ட் நகர்' (லாரிப்பேட்டை) அமைக்க வேண்டும் என்பது, திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களின், நீண்டநாள் கோரிக்கை. ஆட்சியாளர்கள், தேர்தல் நேரத்தில் மட்டும் இதை கேட்டு பதிவு செய்கின்றனர்; கடந்த, 15 ஆண்டுகால கோரிக்கை, இன்றும் காகித வடிவிலேயே இருக்கிறது. இதுகுறித்து திருப்பூர் பின்னலாடை தொழில் அமைப்பினர் கூறியதாவது:
திருப்பூரில் உற்பத்தியாகும் ஆடைகள், வடமாநிலங்களுக்கு அனுப்பி வைக்க, கன்டெய்னர் லாரிகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. நிறுவனங்களில் இருந்து, வேன்களில் ஏற்றிச்சென்று, கன்டெய்னர் லாரியில் ஏற்ற வேண்டும். இதனால், போக்குவரத்து நெரிசல், நகரப்பகுதியில் அதிகரிக்கிறது.
நகரின் முக்கிய ரோடுகளில், புறநகர் பகுதியில் 'டிரான்ஸ்போர்ட்' நகர் அமைக்கப்பட வேண்டும். கன்டெய்னர் லாரி நிறுவனங்கள், 'டிரான்ஸ்போர்ட்' நகரில் இருந்து, சரக்குகளை பெற்று, அப்படியே வடமாநிலங்கள் மற்றும் பிற மாவட்டம் சென்றுவர ஏதுவாக இருக்கும். நகரப்பகுதியில் கனரக போக்குவரத்து சற்று குறையும்.
திருப்பூர் மாவட்ட நிர்வாகமும், மக்கள் பிரதிநிதிகளும் இக்கோரிக்கையை பரிசீலித்து, மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலை ரோடுகள் அருகே, புதிய 'டிரான்ஸ்போர்ட்' நகர் அமைக்க திட்டமிட வேண்டும். இதன் வாயிலாக, புறநகர் பகுதிகளும், நகர்ப்பகுதிக்கு இணையான வளர்ச்சி பெறவும் வாய்ப்புள்ளது. திருப்பூரின் போக்குவரத்து நெரிசலும் குறையும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

