UPDATED : அக் 29, 2026 10:51 PM
ADDED : அக் 29, 2026 10:46 PM
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி பகுதியில், பொது இடங்களில் குப்பை கொட்டிய வாகனங்கள் பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்பட்டது. விதிமீறல் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி கமிஷனர் அமித் அறிக்கை:
பொது இடங்கள், பிரதான சாலைகள் மற்றும் நீர்நிலைகளின் ஓரங்களில் குப்பை கொட்டப்படுவதைத் தடுக்கவும், அனுமதியின்றி போஸ்டர்கள் ஒட்டுதல் மற்றும் பேனர்கள் வைப்பதைக் கண்காணிக்கவும் மண்டலம் தோறும் குழு அமைத்து 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.
இந்த குழுக்கள் வாயிலாக, இதுவரை 214 விதிமீறல்கள் கண்டறியப்பட்டு 5.78 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அபராதம் செலுத்தாத ஆறு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இரண்டாவது மண்டலம், 31-வது வார்டு பகுதியில் அலுவலர் ரோந்து பணியின் போது விதிமீறலில் ஈடுபட்ட இரு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இவ்வாறு, அமித் கூறியுள்ளார்.
குடிநீர் இணைப்பு துண்டிப்பு
இனிமேலும் இதுபோல் விதிமீறி செயல்பட்டால், உரிய வணிக, தொழில் நிறுவனங்களின் குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு துண்டிக்கப்பட்டு தொழில் உரிமம் ரத்து செய்யப்படும்.
- அமித், மாநகராட்சி கமிஷனர்
