/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மும்மொழிக் கொள்கை அவசியம் வேண்டும்: மக்கள் கருத்து
/
மும்மொழிக் கொள்கை அவசியம் வேண்டும்: மக்கள் கருத்து
மும்மொழிக் கொள்கை அவசியம் வேண்டும்: மக்கள் கருத்து
மும்மொழிக் கொள்கை அவசியம் வேண்டும்: மக்கள் கருத்து
ADDED : மார் 15, 2025 11:54 PM

மும்மொழிக் கல்வியின் அவசியம் என்ன. அதை ஏன் தமிழக மாணவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்ற கேள்வியை திருப்பூர் வட்டாரத்தை சேர்ந்த பல்வேறு தரப்பினரிடம் முன் வைத்தோம்.
இது குறித்து மக்கள் கூறிய கருத்துகள்:
மொழி விஷயத்தில்அரசியல் வேண்டாம்
ராமகிருஷ்ணன்: மும்மொழிக் கொள்கை என்பது காலத்தின் அவசியம். ஒரு குழந்தை, 4ல் இருந்து 12 வயது வரை கற்றல், கேட்டல் மற்றும் நினைவாற்றல் திறன் நன்கு இருக்கும்.
அதனடிப்படையில், 5ம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வி அவசியம், அதன்பின் விருப்ப மொழியுடன், தேசிய மொழிகளுள் ஏதாவது ஒன்று கற்க வேண்டும் என புதிய தேசிய கல்விக்கொள்கை கூறுகிறது. மும்மொழி கற்பதால் எந்த தவறும் இல்லை. வசதியான குடும்ப குழந்தைகள் பெறும் கல்வியை அரசுப்பள்ளி ஏழைக் குழந்தைகளும் இலவசமாக கற்பது அவர்களது எதிர்காலத்துக்கு மிகவும் நல்லது.
இது தான் உண்மையான சமக்கல்வியாக இருக்கும். உலகளாவிய போட்டித் தேர்வுகளுக்கு பல மொழிகள் கற்பது கூடுதல் பயனாக இருக்கும். இதனால் தமிழக கிராமப்புற மாணவர்கள் நிச்சயம் பயனடைவர். தமிழகம் வணிகம் சார்ந்த மாநிலம் என்பதால், கல்வியிலும், தொழிலிலும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதும், அவ்வப்போது மேம்படுத்திக் கொள்வதும் எப்படி அவசியமோ, அது போல மும்மொழி கற்பது காலத்தின் கட்டாயம். போட்டிகள் நிறைந்த இன்றைய சூழலில் ஒருவர் தனித்துவமாக திறன்மிக்கவர்களாக இருக்க பல மொழிகள் கற்பது அவசியம். மும்மொழிக் கல்வியை எதிர்க்கும் மாநில அரசு, இது விஷயத்தில் அரசியல் செய்யாமல், பொதுவான எதிர்கால குழந்தைகள் நலன் சார்ந்த தொலைநோக்கு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.
நமது கடமை
பரிமளா: எனது இரு மகன்களும் மும்மொழி பயிலும் பாடத்திட்டத்தில் படிக்கின்றனர். தமிழ், ஆங்கிலம் மட்டுமின்றி மூன்றாவது மொழியாக அவர்கள் ஹிந்தி கற்றுள்ளனர். இது ஒரு கூடுதல் தகுதி. இதில் எந்த சிரமமும், கவலையும் இல்லை. சிறு வயது முதலே ஒரு புதிய மொழியைப் பயிலும் போது, எளிமையாக அதில் சிறந்த புலமை பெற முடியும். அவர்கள் வருங்கால நலன் கருதி இதை பயிற்றுவித்து அதில் பயிற்சி பெற வைப்பது நம் கடமை. அதிலிருந்து ஒரு போதும் நாம் தவற வேண்டாம்.
வளர்ச்சிக்கு தடை...
தியாகராஜன்: மும்மொழி என்பது மிகவும் அவசியாமானது. கட்டாயம் மாணவர்கள் மூன்றாவது ஒரு மொழியை கற்று அறிந்து வைத்துக் கொள்வது அவசியம். இது மத்திய அரசு நாடு முழுவதும், சமக்கல்வியை அனைத்து மாணவர்களும் பெற வேண்டும் என்ற அடிப்படையில் கொண்டு வந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது என்பது நம் குழந்தைகள் எதிர்காலத்தில் நாமே மண்ணை அள்ளிப் போடுவது போன்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் குடும்பத்தினர் என்ன செய்கின்றனர் என்பது அனைவருக்கும் தெரியும். மக்களை முட்டாளாக்கும் இவர்களின் முயற்சியை மக்கள் அறிவர்.
சிவில் சர்வீஸ் தேர்வுகளில் ஹிந்தி அறிந்த மாணவர்கள் எளிதில் வெற்றி பெறுகின்றனர். தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதன் மூலம் தமிழக அரசு நமது மாணவர்களின் வளர்ச்சியை தடை செய்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
நல்ல விஷயம் தான்
கதிரேசன்: நம் அனைவருக்கும் கூடுதல் மொழி அறிவு அவசியம். தமிழ் - ஆங்கிலம் மட்டுமின்றி, மேலும் ஒரு மொழியை மாணவர்கள் கற்றுக் கொள்வது என்பது இன்றைய கால கட்டத்தில் மிகவும் அவசியம். மும்மொழிக் கொள்கையில், ஏதாவது ஒரு வேற்று மொழி என்று தான் சொல்லப்படுகிறது. அது ஹிந்தி என்று எங்கும் கட்டாயப் படுத்தப்படவில்லை. மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான, பயனுள்ள எந்த மொழியையும் கூடுதலாக அறிந்து கொள்வது நல்ல விஷயம் தான்.
தமிழன் கொடி பறக்கும்
சசிகுமார்: தாய்மொழி மற்றும் பொது மொழியான ஆங்கிலத்துடன் மூன்றாவது ஒரு மொழியை கற்றுக் கொள்வது நிச்சயம் நன்மை தரும். கட்டாயம் இதைக் கற்றுக் கொள்ள வேண்டும்.
நாடு முழுவதும் எங்கு வேண்டுமானாலும், படிப்பு, தொழில், வேலை நிமித்தமாக செல்லும் போது, இதன் அவசியம் நமக்கு தெரிய வரும். தமிழ் கற்று வந்து பிற மாநிலத்தினர் இங்கு தொழில் செய்கின்றனர்; வளர்ச்சி பெற்று வருகின்றனர்.
நாம் ஏன் பிற மொழி படிக்க தயங்க வேண்டும். பிற மாநிலங்களில் தொழில் துவங்கும் நிலையில், இது பெரும் உதவியாக இருக்கும். அடுத்த தலைமுறைக்கு இது போன்ற கூடுதல் ெமாழி கற்பது மிகுந்த உதவியாக இருக்கும். பல மொழி கற்றவர்கள் வெற்றிகளை எளிதாக்கியுள்ளனர். தமிழர்கள் தங்கள் வெற்றிக் கொடியை பிற மாநிலங்களில் பறக்க விட மூன்றாவது மொழி கற்க வேண்டும்.
இதில் என்ன தவறு
வனிதா: உலக மொழிகளில் ஏதாவது ஒரு மொழியை கற்றுக் கொள்ள ஆர்வம் காட்டுகிறோம். அதே சமயம் இந்தியாவில் உள்ள ஒரு மொழியை கற்றுக் கொள்வதில் ஏன் ஆர்வம் காட்டக் கூடாது. எந்த சிரமமும், அவதியும் இன்றி அதை நாம் கற்றுக் கொள்ளலாம். தொழில் நிமித்தமாக மட்டுமல்ல, பணி நிமித்தமாக எந்த மாநிலத்துக்குச் சென்றாலும் அந்த மாநிலத்தின் மொழியை அறிந்து வைத்திருந்தால் எவ்வளவு எளிதாகவும், வசதியாகவும் நாம் அங்கு இருக்க முடியும்.
நம் மாநிலத்தில் நம் தாய்மொழியில் படிக்கிறோம். உலக அளவிலான பொதுமொழியாக தொடர்பு மொழியாக ஆங்கிலத்தைப் பயன்படுத்துகிறோம். இதில் கூடுதலாக வேறு மொழியை கற்றுக் ெகாள்வது நமக்கு எளிதும், அவசியமானதும் கூட. ஆங்கிலம் பேசாத, தெரியாத நாடுகள் உள்ளன. அதே போல் நம் நாட்டில் ஆங்கிலம் அறியாதவர்கள் சில மாநிலங்களில், உள்ளனர். நமது தேவைக்காக நாம் அங்கு செல்லும் போது, அவர்கள் மொழியை அறிந்திருப்பது தான் நமக்கு நல்லது. 3வது மொழியானது ஹிந்தி என்றும் கூறவில்லை. மலையாளம், கன்னடம், தெலுங்கு என எந்த மொழி நமக்கு தேவையோ, எது நமக்கு பயனுள்ளதாகவும், எளிதாகவும் உள்ளதோ அதை நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.