/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தெக்கலுாரில் பஸ் நிற்காத விவகாரம் தாலுகா ஆபீசில் முத்தரப்பு பேச்சு
/
தெக்கலுாரில் பஸ் நிற்காத விவகாரம் தாலுகா ஆபீசில் முத்தரப்பு பேச்சு
தெக்கலுாரில் பஸ் நிற்காத விவகாரம் தாலுகா ஆபீசில் முத்தரப்பு பேச்சு
தெக்கலுாரில் பஸ் நிற்காத விவகாரம் தாலுகா ஆபீசில் முத்தரப்பு பேச்சு
ADDED : மே 24, 2025 11:18 PM

அவிநாசி: தெக்கலுாரில் பஸ்கள் நிற்காத விவகாரம் குறித்து, தாலுகா ஆபீசில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அவிநாசி அருகேயுள்ள தெக்கலுார் ஊருக்குள் வராமல் செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் குறித்து, டி.எஸ்.பி., சிவகுமார் மற்றும் தாசில்தார் சந்திரசேகர் ஆகியோருக்கு பொதுமக்கள் மனு அளித்தனர்.
அதில், இப்பிரச்னைக்கு முழுமையான தீர்வை வழங்கக்கூடிய அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தெக்கலுார் வந்து செல்ல வேண்டிய பஸ்கள் விவரம் வழங்க வேண்டும்.
பஸ் ஸ்டாப்பில் இரு புறங்களிலும் நேர அட்டவணை அமைத்து தர வேண்டும். விதி மீறல்களில் ஈடுபடும் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு வழங்கப்படும் தண்டனை விவரங்கள் மற்றும் தண்டனை வழங்கும் அதிகாரிகளின் விவரங்கள் வழங்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.
அதனடிப்படையில், நேற்று தாலுகா அலுவலகத்தில், தாசில்தார் சந்திரசேகர் தலைமையில், தெக்கலுார் பகுதி பொதுமக்கள் அளித்த மனு தொடர்பாக முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், திருப்பூர் தெற்கு ஆர்.டி.ஓ., வெங்கிடுசாமி, அவிநாசி வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் குமரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துமாரியம்மாள், போக்குவரத்து போலீஸ் எஸ்.ஐ., லோகநாதன், போக்குவரத்து கழக அதிகாரிகள், தனியார் பஸ் உரிமையாளர்கள் பங்கேற்றனர்.
இதில், அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ்கள், தெக்கலுாருக்குள் கண்டிப்பாக சென்று வர வேண்டும், பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாசில்தார் உறுதி அளித்தார்.