/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'பயன்படுத்தும் பாதை மூடினால் இன்னல்'
/
'பயன்படுத்தும் பாதை மூடினால் இன்னல்'
ADDED : ஆக 30, 2025 12:35 AM
திருப்பூர்; ஊத்துக்குளி, தென்முக காங்கயம்பாளையம் கிராமம், நீலாக் கவுண்டம்பாளையம் மக்கள், திருப்பூர் ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையருக்கு அனுப்பிய மனு:
தென்முக காங்கயம்பாளையம் கிராமத்தில் புல எண். 135/1, பட்டா எண்: 365ல் உள்ள நிலம், ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது. இந்த நிலம் எங்கள் முன்னோர்களால் கோவில் நலனுக்காக தானமாக வழங்கப்பட்டது. இந்நிலத்தின் வழியாக செல்லும் ஒரு பாதையை, நாங்கள் உட்பட சுற்றுவட்டார கிராமங்களான கஸ்துாரிபாளையம், தென்முக காங்கயம்பாளையம் பகுதிகளுக்கும், ஊத்துக்குளி நகரத்திற்கு சென்று வர, கடந்த, 3 தலைமுறைகளுக்கு மேலாக பயன்படுத்தி வருகிறோம். இது, நீலாக்கவுண்டம்பாளையம் கிராமத்தின் அத்தியாவசிய மற்றும் பிரதான சாலை.தற்போது அறநிலையத் துறை சார்பில், அப்பகுதியில் மரக்கன்றுகள் நட்டு, வேலி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது; இத்திட்டம், பாராட்டத்தக்கது என்ற போதிலும், வேலி அமைத்தால், பொதுமக்கள் பயன்படுத்தி வரும் பாதை முழுவதும் மூடப்படும் அபாயம் உள்ளது. பாதை மூடப்பட்டால், இப்பகுதி மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாக நேரிடும்; எனவே, எங்கள் முன்னோர், தானமாக வழங்கிய நிலத்தில், மக்கள் பயன்பாட்டில் உள்ள பாதையை அடைக்க கூடாது; எஞ்சிய இடத்தில் வேலி அமைத்து, மரக்கன்று நட்டு வளர்க்க வேண்டும்.
5 கி.மீ., சுற்ற வேண்டும் பாதை மூடப்பட்டால் 5 கி.மீ., சுற்றி வர வேண்டியிருக்கும்.
அவசர மருத்துவ உதவிக்கு ஊத்துக்குளி அரசு மருத்துவமனைக்கு செல்ல, இதுவே முக்கிய பாதை. ஊத்துக்குளியில் உள்ள பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர்கள், கைத்தறி, விசைத்தறிகளில் பணிபுரிவோர், விவசாயிகள் என, அனைவரும் பாதிக்கப்படுவர். எங்கள் ஊருக்கு செல்லும் பிரதான குடிநீர் குழாய் இந்த பாதையோரம் தான் பதிக்கப்பட்டுள்ளது. வேலி அமைத்த பின், ஏதேனும் பழுது ஏற்பட்டால், அதை சரி செய்ய முடியாத நிலை ஏற்படும்.
- நீலாக்கவுண்டம்பாளையம் பகுதி மக்கள்.