/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
52 கோவில்களுக்கு அறங்காவலர் நியமனம்
/
52 கோவில்களுக்கு அறங்காவலர் நியமனம்
ADDED : ஜன 24, 2025 11:31 PM
திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, 52 கோவில்களுக்கான அறங்காவலர் நியமன ஆணை வழங்கும் பணி நேற்று துவக்கி வைக்கப்பட்டது.
ஹிந்து சமய அறநிலையத்துறை பராமரிப்பில் உள்ள கோவில்களுக்கு, தனிநபர், மூன்று நபர் மற்றும் ஐந்து நபர்கள் கொண்ட அறங்காவலர் குழு நியமனம் நடந்து வருகிறது. இக்குழுவில், ஒரு பெண், ஒரு எஸ்.சி., பிரிவினரும் இடம்பெறுகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில், அறங்காவலர் நியமன பணி பரபரப்பாக துவங்கியது. பின் சுணக்கமாகிவிட்டது. சிறிய கோவில்களுக்கு அறங்காவலராக பணியாற்ற, சிலர் முன்வருவதில்லை. இதனால், 50 சதவீத கோவில்களுக்கு அறங்காவலர் நியமனம் நடக்காமல் இருக்கிறது.
இந்நிலையில், புதிதாக நியமிக்கப்பட்ட அறங்காவலர்களுக்கு நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். அறநிலையத்துறை இணை கமிஷனர் ரத்னவேல் பாண்டியன், எம்.பி.,சுப்பராயன், மேயர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தனர்.
அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி, புதிய அறங்காவலர்களுக்கு நியமன ஆணைகளை வழங்கினர். மாவட்டத்தில் இதுவரை, 334 கோவில்களுக்கு அறங்காவலர் நியமனம் நடந்துள்ளது. தற்போது, 52 கோவில்களுக்கு தனி அறங்காவலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
'விழா திடீரென ஏற்பாடு செய்யப்பட்டதால், பலருக்கும் தகவல் அளிக்க இயலவில்லை. விடுபட்டவர்களுக்கு, அந்தந்த ஆய்வாளர்கள் மூலமாக, நியமன ஆணைகளை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. நியமன ஆணை பெற்றவர்கள், பொறுப்பேற்கும் நாளில் இருந்து, இரண்டு ஆண்டுகளுக்கு அறங்காவலராக செயல்படுவர்' என, அறநிலையத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
திருப்பூர் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியம், அறங்காவலர்கள் ஆடிட்டர் முத்துராமன், கலைச்செல்வி, சாமி, ஜெகநாதன், கோவில் செயல் அலுவலர், ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.