/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
டென்னிஸ் மீது 'தீரா காதல்' சாதிக்கும் இரட்டை சகோதரியர்
/
டென்னிஸ் மீது 'தீரா காதல்' சாதிக்கும் இரட்டை சகோதரியர்
டென்னிஸ் மீது 'தீரா காதல்' சாதிக்கும் இரட்டை சகோதரியர்
டென்னிஸ் மீது 'தீரா காதல்' சாதிக்கும் இரட்டை சகோதரியர்
ADDED : அக் 26, 2024 11:09 PM

திருப்பூர், பல்லடம் ரோடு, டி.கே.டி., மில் பகுதியை சேர்ந்தவர் வேலுமணிகண்டன். இவரது மகள்கள் ஸ்ரீ சைலீஸ்வரி, ஸ்ரீ சாஸ்தாயினி. பதினாறு வயதான இரட்டை சகோதரிகளான இருவருக்கும் டென்னிஸ் மீது 'தீரா காதல்'. தினமும், 6 - 8 மணி நேரம் வரை டென்னிஸ் பயிற்சி பெறுகின்றனர்.
பத்தாம் வகுப்பு படித்து வரும் இவர்கள், தொடர் பயிற்சியால், மாநில முதல்வர் கோப்பை டென்னிஸ் போட்டி தனிநபர், குழு போட்டிகளிலும் தங்கம் வென்று அசத்தியுள்ளனர்.
கடந்தாண்டு ஆண்டு முதல்வர் கோப்பை போட்டியில், தனிநபர் பிரிவில் வெள்ளி, இரட்டையர் பிரிவில் வெள்ளி வென்ற இருவரும், நடப்பாண்டு தனி நபர், குழு போட்டிகளிலும், முதலிடம் பெற்று, தங்கம் கைப்பற்றி அசத்தியுள்ளனர்.
தனிநபர் இறுதி போட்டியில், சென்னை அணியை தனித்தனியே வீழ்த்திய இருவரும், இரட்டையர் பிரிவில் (ஸ்ரீ சாஸ்தாயினி - ஸ்ரீ சைலீஸ்வரி இணைந்து) திருச்சி அணியை, 6 - 1, 6 - 1 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றனர். தனிநபர், இரட்டையர் பிரிவிலும் வெற்றி பெற்றதால், இருவரும் இணைந்து, 2.50 லட்சம் ரூபாய் ரொக்க பரிசு பெற்றுள்ளனர்.
தேசிய வீராங்கனைகள் தந்தையின் இலக்கு
தந்தை வேலுமணிகண்டன் கூறுகையில், ''இருவரும் இரட்டையர் என்பதால், டென்னிஸ் போட்டிகளில் இருவருக்கும் ஒரு மாதிரியான சிந்தனை ஆர்வம் இருக்கிறது.
தனிநபர், இரட்டையர் பிரிவிலும் தனித்தனி, வேறு ஒரு ஜோடியுடன் விளையாடினாலும், ஒரே மாதிரியான ஸ்டைலில் விளையாடினர். இருவருக்கும் இடையே போட்டி நடத்தினால், யார் வெற்றி பெறுவர் என்பதை தீர்மானிக்கவே முடியாது.
அந்தளவு இருவருமே திறமைசாலிகள் என்பதால், தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறேன். மாநில போட்டி களை கடந்து, அகில இந்திய போட்டிகளில் பங்கேற்று, இருவரையும், இந்திய அளவில் டென்னிஸ் வீராங்கனைகளாக உருவாக்குவதே எனது முதல் இலக்கு,'' என்றார்.
தந்தை சொல்மிக்க மந்திரமில்லை
இரட்டையர்களான ஸ்ரீ சைலீஸ்வரி, ஸ்ரீ சாஸ்தாயினி கூறுகையில், ''அப்பாவுடன் தான் முதலில் டென்னிஸ் விளையாடினோம். டென்னிஸ் போட்டியின் மீதான ஆர்வம் வளர காரணம் அப்பா தான். எந்த ஊரில் போட்டி நடந்தாலும் எங்களை அழைத்துச் சென்று விடுவார்.
டென்னிஸ் போட்டிக்கு தமிழக அளவிலும், தேசிய அளவிலும் வீராங்கனையர் குறைவு. ஆகையால், நீங்கள் திறமையாக விளையாடினால் தொடர்ந்து, பல வெற்றிகளை பெற்றுக்கொண்டு, பாராட்டுக்களை அள்ளலாம் என ஊக்கப் படுத்துவார்.
அவரது உந்துததால் தான் எங்களை மாநில போட்டி வரை அழைத்துச் சென்றது; வெற்றி பெறவும் செய்தது,'' என்றனர்.