/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இரு தரப்பு மோதல்; மாரடைப்பில் ஒருவர் பலி
/
இரு தரப்பு மோதல்; மாரடைப்பில் ஒருவர் பலி
ADDED : ஜூலை 05, 2025 11:42 PM

பல்லடம்: பல்லடத்தை அடுத்த, கல்லம்பாளையத்தை சேர்ந்த வேலுசாமி மனைவி முத்தம்மாள், 65. அவிநாசி, தெக்கலுாரை சேர்ந்த சுப்பிரமணி மகன் நாகராஜ் 55; ஓ.இ., மில் உரிமையாளர்.
முத்தம்மாளுக்கு, கல்லம்பாளையத்தில், 71 சென்ட் இடம் உள்ளது. இதன் அருகே, நாகராஜ் மற்றும் குடும்பத்தினருக்கு சொந்தமான, 43 சென்ட் இடம் உள்ளது. முத்தம்மாள் மற்றும் நாகராஜூக்கு இடையே நீண்ட நாட்களாக வழித்தட பிரச்னை உள்ளது. இதற்கிடையே, ஒரு தரப்பினர், நேற்று கம்பி வேலி அமைக்க முயற்சிக்க, இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டபோது, நாகராஜ், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன் உயிரிழந்தார்.
இது தொடர்பாக போலீசார், கார்த்தி 29, சண்முக மூர்த்தி 55 மற்றும் இவரது மனைவி சம்பூர்ணவல்லி 42, பழனிசாமி 57 ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
போலீசார் கூறுகையில், 'இரு தரப்பினர் மோதலில் ஈடுபட்டபோது, நாகராஜுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, மருத்துவமனை சிகிச்சைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
கொலை செய்யும் எண்ணத்தில் எதிர் தரப்பினர் நாகராஜை தாக்கவில்லை. எனவே, கொலையாகாத இறப்பு என்ற அடிப்படையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடந்துவரும் நிலையில், பிரேத பரிசோதனை முடிவுக்கு பின், அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடரும்,' என்றனர்.