/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உதயநிதி கிடுக்கிப்பிடி; 'ஆடிப்போன' அதிகாரிகள்
/
உதயநிதி கிடுக்கிப்பிடி; 'ஆடிப்போன' அதிகாரிகள்
ADDED : டிச 21, 2024 06:43 AM

திருப்பூர்; அதிகாரிகள் கொடுக்கும் அறிக்கையை நம்பாமல், தனிக்குழுவின் களஆய்வு அடிப்படையில், வளர்ச்சி பணிகள் மற்றும்மக்களின் குறைகள் குறித்து, திருப்பூரில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில், துணை முதல்வர் உதயநிதி கேள்விக்கணைகளைச் சரமாரியாக தொடுத்ததால் அதிகாரிகள் 'ஆடிப்போயினர்'. நேரடியாக பொதுமக்களிடமே மொபைல்போனில் உதயநிதி தொடர்பு கொண்டபோது, அவர்கள் புகார் பட்டியலை வாசித்ததால் அதிகாரிகள் பதட்டமாயினர்.
நேற்றுமுன்தினம் திருப்பூர் வந்த துணை முதல்வர் உதயநிதி, கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து அரசுத்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டத்தை நடத்தினார். மதியம் 12:30க்கு துவங்கிய ஆய்வுக்கூட்டம், 3:00 மணி வரை, கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் நடைபெற்றது.
வழக்கமான ஆய்வுக்கூட்டங்களில், அந்தந்த துறை சார்ந்த அதிகாரிகள், தங்கள் துறை சார்ந்து நடைபெறும் பணிகள்; அவற்றின் நிலை குறித்த விவரங்கள் குறித்த அறிக்கையை சமர்ப்பித்துவிடுவர். அந்த அறிக்கை அடிப்படையிலேயே, கூட்டத்தில் ஆய்வு அதிகாரிகள், கேள்விகள் எழுப்பி, ஆய்வு நடத்துவர்.
இதுபோன்ற ஆய்வுகளில், அதிகாரிகள் தங்களுக்கு 'பாதகமான' விஷயங்களை அறிக்கையிலிருந்து மறைத்துவிட வாய்ப்பு உள்ளது.
உதயநிதியோ, ஆய்வுக்கூட்டம் நடத்துவதில் புதிய பாணியை கடைபிடித்தார். மக்களை நேரடியாக தேடிச் சென்று, மக்களின் பிரச்னைகள் என்ன என்பதை கண்டறிவது; அதனடிப்படையில், ஆய்வுக்கூட்டத்தில் துறை சார்ந்த அதிகாரிகளிடம் கிடுக்கிப்பிடி கேள்வி எழுப்பும் நடைமுறையை பின்பற்றினார்.
களமிறங்கிய குழுக்கள்
ஓரிரு நாட்கள் முன்னதாகவே சென்னையிலிருந்து, ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலைமையில், மூன்று குழுக்கள் திருப்பூரில் களமிறங்கின. அந்த அதிகாரிகள் குழு மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, மக்களை சந்தித்தும், நேரடி கள ஆய்வு செய்தும், பிரச்னைகள் அனைத்தையும் ஆராய்ந்து, துணை முதல்வருக்கு ரகசிய தகவல் அளித்துள்ளது.
கேள்விக்கணைகள்
அதனடிப்படையிலேயே, ஆய்வுக்கூட்டத்தில் உதயநிதி, துறை சார்ந்த அதிகாரிகளிடம் கிடுக்கிப்பிடி கேள்விகள் எழுப்பியுள்ளார். குடிநீர் வினியோகத்தில் குளறுபடி, சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் அதிகரிப்பு; பட்டா வழங்குவதில் இழுத்தடிப்பு; கட்டுமான பணிகளில் தாமதம் என, அடுத்தடுத்து உதயநிதி வீசிய கேள்விக்கணைகளை சமாளிக்க முடியாமல் அதிகாரிகள் தடுமாறினர்.
முதல்வரின் தனிப்பிரிவுக்கு வந்த புகார்கள் அடிப்படையில், நான்கு பேரை மொபைல்போனில் தொடர்புகொண்ட உதயநிதி, தற்போதைய நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.
15 நாளுக்கு ஒருமுறை...
அதிகாரிகள் குழு ஆய்வுக்கு சென்ற நேரத்தில், காலை, 11:00 மணிக்கு, பொங்கலுார் ஒன்றியம் காட்டூரில், அங்கன்வாடி மையம் பூட்டப்பட்டிருந்தது; இது துணை முதல்வரை கோபமடையச் செய்தது. உடுமலை ஒன்றியத்தை சேர்ந்த ஒருவரை மொபைல்போனில் உதயநிதி தொடர்புகொண்டபோது, 15 நாட்களுக்கு ஒருமுறையே குடிநீர் வினியோகிப்பதாக தெரிவித்தார். மற்றொரு அழைப்பில், பொங்கலுாரை சேர்ந்தவர், வீட்டுமனை பட்டா வழங்காமல் காலதாமதம் செய்வதாக புகார் தெரிவித்தார்.
இருக்கை நுனியில் அதிகாரிகள்
திருப்பூரில் குற்ற சம்பவங்கள் அதிகரிக்க காரணம் என்ன; எத்தனை 'போக்சோ' வழக்குகள் பதிவாகியுள்ளன; கொலை சம்பவங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன என, சட்டம் ஒழுங்கு தொடர்பான கேள்விகள் அதிகம் இடம்பெற்றன.
துணை முதல்வரிடமிருந்து அடுத்து என்ன கேள்வி வருமோ என்கிற பதட்டத்தில், அதிகாரிகள் ஒவ்வொருவரும் இருக்கையின் நுனியில், கண் இமைக்காமல் அமர்ந்திருந்தனர்.