/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உடுமலை கால்வாய் துார்வாரும் பணி தீவிரம்; நீர் திறப்புக்கு தயாராகும் அதிகாரிகள்
/
உடுமலை கால்வாய் துார்வாரும் பணி தீவிரம்; நீர் திறப்புக்கு தயாராகும் அதிகாரிகள்
உடுமலை கால்வாய் துார்வாரும் பணி தீவிரம்; நீர் திறப்புக்கு தயாராகும் அதிகாரிகள்
உடுமலை கால்வாய் துார்வாரும் பணி தீவிரம்; நீர் திறப்புக்கு தயாராகும் அதிகாரிகள்
ADDED : ஜூலை 23, 2025 09:11 PM

உடுமலை; பி.ஏ.பி., பாசனத்திற்கு நீர் திறக்கப்பட உள்ள நிலையில், உடுமலை கால்வாய் துார்வாரும் பணி நடந்து வருகிறது.
பி.ஏ.பி., 4ம் மண்டல பாசனத்திற்கு வரும், 27ம் தேதி நீர் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. பி.ஏ.பி., பாசன நிலங்களுக்கு ஆண்டு முழுவதும் நீர் செல்லும் வகையில், 37 கி.மீ., நீளத்தில் உடுமலை கால்வாய் அமைந்துள்ளது.
இக்கால்வாய் வழித்தடத்தில், ஜல்லிபட்டி, போடிபட்டி, கணக்கம்பாளையம், பெரியகோட்டை மற்றும் உடுமலை நகராட்சி பகுதிகளில், கரைகளில் குப்பை கொட்டப்பட்டு, குப்பை கொட்டும் மையமாக மாற்றப்பட்டு வருகிறது.
அதிலும், ஜல்லிபட்டி, போடிபட்டி, கணக்கம்பாளையம் ஊராட்சிகளில், கால்வாய் கரையில் குப்பைக்கிடங்கு அமைக்கப்பட்டு, மலைபோல் கழிவுகள் தேங்கியுள்ளன.
பிளாஸ்டிக், துணி என திடக்கழிவுகள் நேரடியாக கால்வாயில் கொட்டப்படுவதோடு, பாசனத்திற்கு நீர் செல்லும் போது, கால்வாய் அடைப்பு, மடைகள் அடைக்கப்படுகிறது.
மது பாட்டில்கள் உடைந்து, நீரில் கலந்து பாசன நிலங்களில் பணி மேற்கொள்ள முடியவில்லை, எனவே, நீர் திறப்புக்கு முன், உடுமலை கால்வாயை முழுமையாக துார்வாரமும், கரைகளில் உள்ள கழிவுகளை அகற்றவும் வேண்டும், என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
வரும், 27ம் தேதி முதல், நான்காம் மண்டல பாசனத்திற்கு நீர் திறக்க உள்ளதால், நீர் வளத்துறை சார்பில், கால்வாய் துார்வாரும் பணிகள் நடந்து வருகின்றன.
கழிவுகள் மற்றும் மண் தேங்கியுள்ள பகுதிகளில், பொக்லைன் உள்ளிட்ட கன ரக வாகனங்கள் வாயிலாக துார்வாரப்பட்டு வருகிறது. மேலும், கால்வாய் கரையிலுள்ள முட்புதர்கள் அகற்றப்பட்டும், மடைகள் புதுப்பிக்கும் பணியும் நடந்து வருகிறது.
இப்பணிகளை, செயற்பொறியாளர் பிரபாகரன், உதவி செயற்பொறியாளர் பாபுசபரீஸ்வரன், உதவி பொறியாளர் விஜயசேகர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அதிகாரிகள் கூறுகையில், 'உடுமலை கால்வாயில், கழிவுகள், மண் தேங்கியுள்ள பகுதிகளில் முழுமையாக துார்வாரப்பட்டு, கால்வாயில் நீர் செல்லும் வகையில் சீரமைக்கப்பட்டு வருகிறது. மற்ற பகுதிகளில், கரையில் முட்புதர்கள் அகற்றப்பட்டு, மடைகள் சீரமைக்கப்பட்டு வருகிறது. விரைவில் பணிகளை முடித்து, பாசனத்திற்கு நீர் திறக்கப்படும். இனிமேல், கால்வாய் கரையில் கழிவுகள் கொட்டினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.