/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மழையால் இடிந்த வீடுகளை புதுப்பிக்க முடியாமல்... வனமகன்கள் வேதனை!அச்சத்துடன் குடியிருக்கும் பரிதாபமான நிலைமை
/
மழையால் இடிந்த வீடுகளை புதுப்பிக்க முடியாமல்... வனமகன்கள் வேதனை!அச்சத்துடன் குடியிருக்கும் பரிதாபமான நிலைமை
மழையால் இடிந்த வீடுகளை புதுப்பிக்க முடியாமல்... வனமகன்கள் வேதனை!அச்சத்துடன் குடியிருக்கும் பரிதாபமான நிலைமை
மழையால் இடிந்த வீடுகளை புதுப்பிக்க முடியாமல்... வனமகன்கள் வேதனை!அச்சத்துடன் குடியிருக்கும் பரிதாபமான நிலைமை
ADDED : ஜன 30, 2024 11:48 PM
உடுமலை:கனமழையினால் சேதமடைந்த வீடுகளை, புதுப்பிக்கவும், நிவாரணம் வழங்கவும், மலைவாழ் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தும், அரசு தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பது, அப்பகுதி மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை, அமராவதி வனச்சரகத்தில், 13க்கும் மேற்பட்ட மலைவாழ் கிராமங்கள் உள்ளன.
அடர்ந்த வனப்பகுதியில், போதிய அடிப்படை வசதி இல்லாமல், மேடு, பள்ளமான பகுதியில், மண்ணில் வீடு கட்டி, அங்கு பாரம்பரியமாக வசித்து வருகின்றனர்.
உடுமலை வனச்சரகம் ஈசல்திட்டு கிராமத்தில், 60க்கும் மேற்பட்ட வீடுகளும், திருமூர்த்திமலை குடியிருப்பில், 100க்கும் மேற்பட்ட வீடுகளும், குழிப்பட்டியில் 85க்கும் அதிகமான குடும்பத்தினரும் வசித்து வருகின்றனர்.
மழையால் பாதிப்பு
கடந்த, 10ம் தேதி மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் கனமழை பெய்தது. ஒரே நாளில், 100 மி.மீ., க்கும் அதிகமான மழைப்பொழிவு இருந்தது.
இதனால், வனத்திலுள்ள சிற்றாறுகளில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், மலைவாழ் கிராமத்திலுள்ள, பெரும்பாலான வீடுகள் பலத்த சேதமடைந்தது.
வீடுகளின் மண் சுவர் சரிந்து, சிலர் காயமும் அடைந்தனர். பலத்த காற்றினால், மேற்கூரையும் பாதிக்கப்பட்டது. தொடர் மழையினால், அனைத்து மலைவாழ் கிராமங்களிலும், பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது.
ஆனால், அப்பகுதி மக்களுக்கு எவ்வித நிவாரணமும் கிடைக்கவில்லை. 'வனத்தில் கிடைக்கும் சிறு வனப்பொருட்களை சேகரித்து, விற்பனை செய்வது மட்டுமே வருவாயாக உள்ளது.
மழையினால், விவசாயமும் பாதித்துள்ளது. இதனால், வீடுகளில், அடிப்படை பராமரிப்பு பணிகளை கூட மேற்கொள்ள முடியவில்லை. கனமழையால் பாதித்த வீடுகளை புதுப்பிக்க அரசு உதவ வேண்டும் என, நீண்ட காலமாக அரசை வலியுறுத்தி வருகிறோம்.
ஆனால், எவ்வித நடவடிக்கையும் இல்லை. இடிந்த வீடுகளில், குழந்தைகள், முதியவர்களுடன் மிகுந்த சிரமப்பட்டு வசித்து வருகிறோம்,' என திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை மனு அனுப்பினர்.
கணக்கெடுப்பு நிறைவு
கோரிக்கை மனு அடிப்படையில், கனமழையால், பாதித்த வீடுகளை, வருவாய்த்துறையினர் நேரடி ஆய்வு செய்தனர். அதன்படி, ஈசல் திட்டு, திருமூர்த்திமலை செட்டில்மெண்ட் மற்றும் குழிப்பட்டியில், 66 வீடுகள் சேதமடைந்துள்ளது தெரியவந்தது.
இதையடுத்து, வீடுகளின் நிலை, பயனாளியின் பெயர் உள்ளிட்ட பட்டியல் தயார் செய்யப்பட்டு, திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பியுள்ளனர்.
மேலும், புலிகள் காப்பக வனப்பகுதியில், வீடுகள் அமைந்துள்ளதால், வனத்துறை வாயிலாக புனரமைப்பு மற்றும் நிவாரணம் வழங்கலாம் என, பரிந்துரைத்துள்ளனர்.
அமராவதி வனச்சரகத்துக்குட்பட்ட மலைவாழ் கிராமங்களிலும், வீடுகளை புதுப்பிக்க முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.
எனவே, வனத்துறை வாயிலாக அனைத்து மலைவாழ் கிராமங்களிலும், ஆய்வு செய்து, சிறப்பு திட்டத்தின் கீழ், வீடுகளை புதுப்பிக்கவும், தற்போதைய பாதிப்புக்கு நிவாரணம் வழங்கவும், தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மலைவாழ் கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.