/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'வரி உயர்வால் வார்டில் தலை காட்ட முடியல' : நகராட்சி கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர் புலம்பல்
/
'வரி உயர்வால் வார்டில் தலை காட்ட முடியல' : நகராட்சி கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர் புலம்பல்
'வரி உயர்வால் வார்டில் தலை காட்ட முடியல' : நகராட்சி கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர் புலம்பல்
'வரி உயர்வால் வார்டில் தலை காட்ட முடியல' : நகராட்சி கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர் புலம்பல்
ADDED : ஜூலை 16, 2025 11:33 PM

அவிநாசி; அவிநாசி நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம், அதன் தலைவர் தனலட்சுமி தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் மோகன், கமிஷனர் வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தனர்.
கவுன்சிலர்கள் பேசியதாவது:
கோபாலகிருஷ்ணன் (காங்.,): ஏற்கனவே தமிழக அரசு ஆண்டுக்கு, 6 சதவீதம் வரி உயர்வு உயர்த்தியுள்ளது. தற்போது நகராட்சி நிர்வாகத்தின் புதிய வரி விதிப்பை பொதுமக்கள் எவ்வாறு ஏற்க முடியும். வள்ளுவர் வீதி, ஸ்ரீராம் நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியில், 1965ல், க.ச.எண் 183 -1ஏ- வில் 4.76 ஏக்கர் நிலத்தில், 3 ஏக்கருக்கு மட்டும் 'டிடிசிபி' அனுமதி பெற்று மனை பிரிவுகளாக செய்தனர். அதில், 33 சென்ட் ரிசர்வ் சைட்டாக, ஒப்படைத்தனர். அதற்கு கம்பி வேலி அமைத்த பின், அனுமதி வழங்க வேண்டும். இந்த தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும்
சித்ரா (அ.தி.மு.க.,): -சொத்து வரி ஆண்டுக்கு 6 சதவீதம் உயர்த்தப்பட்டு வசூலித்து வரும் நிலையில், புதிதாக கட்டும் கட்டடங்களுக்கு, 5 சதவீத வரி உயர்வு செய்யப்பட்டுள்ளது. நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு, 4 மாதமாகியும் சுகாதார ஆய்வாளர் நியமிக்கப்படாதால் பிறப்பு இறப்பு சான்றிதழ் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது. வரி உயர்வை கண்டித்து, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்கிறோம்.
ஸ்ரீதேவி (அ.தி.மு.க.,): பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட வணிக வளாகம் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. விரைவில், செயல்பாட்டுக்கு வரவில்லை என்றால் போராட்டம் நடத்துவோம்.
தங்கவேலு (தி.மு.க.,): சிந்தாமணி தியேட்டர் எதிரிலுள்ள இரண்டு வீதிகளிலும் ரோடு போட வேண்டும். தொடர்ந்து வரி உயர்வு உயர்த்தப்பட்டதால் வார்டு பகுதிகளில் கவுன்சிலர்கள் தலை காட்ட முடியவில்லை. மக்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் பெரும் அவமானமாக உள்ளது.
திருமுருகநாதன்(தி.மு.க.,): அவிநாசியில் உள்ள 3 ஆயிரம் தொழில் நிறுவனங்களில், 300க்கு மட்டுமே வரி போடப்பட்டுள்ளது. அதிலிருந்து வரி வசூல் செய்தால் பொதுமக்கள் மீது சுமத்தப்படும் மற்ற வரியினங்கள் குறைக்கலாம்.
தனலட்சுமி (நகராட்சி தலைவர்): முன்னர் ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் செயல்பட்டு வந்த பள்ளிகள், இப்போது நகராட்சி பள்ளியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதற்காகவே கல்வி வரி உயர்த்தப்படுகிறது. பழைய பஸ் ஸ்டாண்ட் வணிக வளாக கடைகளுக்கு வாடகை நிர்ணயம் செய்து, பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.