ADDED : மார் 29, 2025 06:15 AM

மண் வளத்தை மலடாக்கி, நிலம், நீர், காற்று மாசுக்கு முக்கிய காரணங்களுள் ஒன்றான, நெகிழிக்கழிவு எனப்படும் பாலிதீன் பைகளை, கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில், பெரும் திண்டாட்டமே தென்படுகிறது.
துாய்மை பாரத திட்டத்தின் கீழ், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் தொடர்ச்சியாக, நெகிழி மேலாண்மை திட்டமும் நடைமுறையில் இருந்து வருகிறது. வீடு, பொது இடங்களில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக பிரித்தெடுத்து, மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிப்பதும்; மக்காத குப்பையை மறுசுழற்சிக்கு பயன்படுத்துவதுமே, திடக்கழிவு மேலாண்மை திட்டம்.மக்காத குப்பைகளில் இருந்து வரும் பாலிதின் பைகளை மட்டும் தனியாக பிரித்தெடுத்து, அவற்றை இயந்திரத்தின் உதவியுடன் அரைத்து, துாளாக்கி, அவற்றை சாலை அமைக்க பயன்படுத்துவது தான், 'நெகிழி மேலாண்மை திட்டம்'.
திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி, காங்கயம், வெள்ளகோவில் ஒன்றிய ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்பாட்டில் இருக்கிறது. ஒவ்வொரு வட்டாரத்துக்கு ஒரு ஊராட்சியில், நெகிழி அரவை இயந்திரம் வைக்கப்பட்டிருக்கிறது. அந்த வட்டாரத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில் சேகரிக்கப்பட்டு தனியாக பிரிக்கப்படும் பாலிதின் கவர்கள், அரவை இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ஊராட்சிக்கு எடுத்து வரப்பட்டு, அரைக்கப்பட வேண்டும் என்பதே இத்திட்டத்தின் செயல்பாடு.ஆனால், மாவட்டத்தில், இத்திட்டம் எதிர்பார்த்த பலன் தரவில்லை. 3 ஒன்றியங்களில் உள்ள ஊராட்சிகளில், 10 சதவீத ஊராட்சிகள் தான், நெகிழி மேலாண்மை திட்டத்துக்கு ஒத்துழைப்பு கொடுக்கின்றன. பெரும்பாலான ஊராட்சிகள் ஒத்துழைக்காததால், நெகிழி ஒழிப்பு திட்டம் கைகூடவில்லை.
காரணம் என்ன?
ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள் கூறியதாவது: கிராம ஊராட்சிகளில், குடியிருப்புகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, துாய்மைப் பணியாளர்கள் இல்லை. அவர்களுக்கு வழங்கும் மாத சம்பளமும் மிகக்குறைவு என்பதால், நெகிழியை தனியாக பிரித்தெடுப்பதில் அவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. எங்கும், எதிலும் பாலிதீன் பயன்பாடு தான்; சற்றும் குறைந்தபாடில்லை. கடைகளுக்கு செல்லும் மக்கள், துணிப்பைகளை எடுத்து செல்லாமல், பாலிதீன் பைகளை தான் வாங்குகின்றனர்.
நாப்கின், குழந்தைகளுக்கான டயாபர்கள் போன்றவற்றையும் தனியாக பிரித்து தராமல், குப்பையுடன், குப்பையாக தந்து விடுகின்றனர்; இதை அப்புறப்படுத்துவதில், துாய்மைப்பணியாளர்கள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். எனவே, குப்பைகளை தரம் பிரித்து வழங்குவதில், பொதுமக்களும் விழிப்புணர்வு பெற வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.