அறிவிக்கப்படாத மின்தடை தொழில் நிறுவனங்கள் பாதிப்பு
அறிவிக்கப்படாத மின்தடை தொழில் நிறுவனங்கள் பாதிப்பு
UPDATED : செப் 22, 2026 06:57 PM
ADDED : செப் 22, 2026 06:41 PM
திருப்பூர்: கோவில்வழி சுற்றுப்பகுதியில், நேற்று பகல் முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டதால், தொழிற்சாலைகள் இயக்கம் பாதிக்கப்பட்டது.
திருப்பூர் மின் கோட்டம், வீரபாண்டி உபகோட்டத்துக்கு உட்பட்டது கோவில்வழி பகுதி. நேற்று, ஊத்துக்குளி கோட்டத்துக்கு உட்பட்ட, முதலிபாளையம், நல்லுார், பலவஞ்சிபாளையம் பகுதிகளில், மின்நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், முன்னறிவிப்பு இல்லாமல், கோவில்வழி பகுதியிலும் நேற்று மின்தடை ஏற்பட்டது.
காலை, 9:30 மணிக்கு துவங்கி, மாலை, 4:00 மணி வரை மின்சார வினியோகம் தடைபட்டது. முன்னறிவிப்பில்லாத இந்த மின்தடையால், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டன.
இதுகுறித்து, தொழில் துறையினர் கூறுகையில், 'மின் நிறுத்தம் அறிவித்து, அந்நாளில் செய்ய வேண்டிய பணிகளை, பிற நாட்களில் செய்வதால், மக்கள் பாதிக்கப்படுகின்றனர். மின் ஒயர் மாற்றும் பணிக்காக, நிறுத்தி வைத்ததாக மின் வாரிய அலுவலர் கூறுகிறார். ஒரு மணி நேரத்தில் மின்சாரம் இணைப்பு கொடுத்து விடுவோம், என்றனர். ஆனால், மாலை வரை மின்சாரம் இல்லாமல் தொழிற்சாலைகள் இயங்கவில்லை,' என்றனர்.
பயனில்லாத பலகை
மின்வாரிய அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு, ஒட்டுமொத்தமாக, புதிய குழு மொபைல் போன் எண் வழங்கப்பட்டுள்ளது. பலவஞ்சிபாளையம் மின் பொறியாளர் அலுவலகம் உட்பட, பல்வேறு அலுவலகங்களில், அவ்விவரம் வைக்கப்படவில்லை. பழைய மொபைல் போன் எண் விவரம் உள்ள தகவல் பலகை இன்றும் வைக்கப்பட்டுள்ளது. இதனால், மின்தடைக்கான காரணம் கேட்டறிய மக்கள் தொடர்புகொள்ள முடியவில்லை என மின் நுகர்வோர் புகார் தெரிவித்தனர்.
