/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மழைநீர் வடிகாலில் கலக்கும் பாதாள சாக்கடை கழிவு
/
மழைநீர் வடிகாலில் கலக்கும் பாதாள சாக்கடை கழிவு
ADDED : ஜன 02, 2025 11:23 PM

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப் படுகிறது. அவ்வகையில், 2 வது மண்டலத்துக்கு உட்பட்ட 32வது வார்டு பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தில் குழாய் பதித்து இணைப்புகள் வழங்கி பயன்பாட்டில் உள்ளது.
இதில் டி.பி.ஏ., காலனி செல்லும் ரோடு, ஒற்றைக் கண் பாலத்தை ஒட்டிய பகுதியில், இக்குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன.
இதில், கிருஷ்ணமூர்த்தி கார்டன் அருகே பிரதான ரோட்டில் அமைந்துள்ள பாதாள சாக்கடையிலிருந்து அரையடி விட்டம் கொண்ட பிளாஸ்டிக் குழாய் பொருத்தி பாதாள சாக்கடை கழிவு நீர், அங்குள்ள மழை நீர் வடிகாலில் சென்று சேரும் வகையில் பதிக்கப்பட்டுள்ளது.
பாதாள சாக்கடை 'மேன் ேஹால்' அமைந்துள்ள இடத்திலிருந்து குழாய் பதித்து இந்த கழிவு நீர் வெளியேறுகிறது. இதனால் அப்பகுதியினர் அச்சம் அடைந்துள்ளனர். பாதாள சாக்கடை திட்டத்திலிருந்து கழிவு நீர் வெளியேற்றப்பட்டு மழை நீர் வடிகாலில் கலக்கிறது. இது தடுக்கப்பட வேண்டும் என்று அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.
மண்டல குழு தலைவர் கோவிந்தராஜ் கூறியதாவது:
இப்பகுதியில், வீட்டு இணைப்புகளிலிருந்து வந்து சேரும் பாதாள சாக்கடை கழிவுகள் சில இடங்களில் பொங்கி வழிந்து ரோட்டில் சென்று பாய்வது நீண்ட காலமாக இருந்தது. இதனால், பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
ரோட்டில் நடந்து செல்ல முடியாத நிலை இருந்தது. அருகில் கோவிலும் இருந்த நிலையில், பெரும் சிரமம் நிலவியது.
இதற்காக, பாதாள சாக்கடை பிரதான குழாயில் ஏர் பைப் பொருத்தி, அதன் வழியாக, ரோட்டில் கழிவு நீர் பாய்வது தடுக்கப்பட்டு தற்போது மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ரயில்வே பாதையைக் கடந்து, ஊத்துக்குளி ரோட்டில் உள்ள பிரதான கழிவு நீர் சேகரிப்பு குழாயில் இப்பகுதி இணைக்கப்பட்டால் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

