/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மத்திய பட்ஜெட்: தொழில் துறை எதிர்பார்ப்பு
/
மத்திய பட்ஜெட்: தொழில் துறை எதிர்பார்ப்பு
ADDED : ஜன 18, 2024 12:28 AM
திருப்பூர் : திருப்பூர் பின்னலாடை வர்த்தகத்தில் நிலையான நுால் விலையால், உள்நாட்டு பனியன் ஆடை உற்பத்தியும், வர்த்தகமும் இடையூறின்றி சென்று கொண்டிருக்கிறது. இருப்பினும், மின்கட்டண உயர்வு, புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்குவது, புதிய கோணத்தில் புதிய தொழில்நுட்ப ஆடைகளை சந்தைப்படுத்துவது போன்ற எதிர்பார்ப்புகள் இருக்கின்றன.
பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தை பொறுத்தவரை, 2022 மற்றும் 2023ம் ஆண்டுகள், வளர்ச்சியில்லா ஆண்டாக முடிந்துவிட்டது. பஞ்சு விலை உயர்வு, நுால் விலை உயர்வு போன்ற புயல்வீசியதால், நிலைதடுமாறிய ஏற்றுமதி வர்த்தகம், நிலையை அடைந்துள்ளது.
இருப்பினும், இறக்குமதி நாடுகளில் நிலவும் சிக்கலான சூழல் காரணமாக, பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தில் வளர்ச்சி இல்லை; வழக்கமான ஆர்டர்களை பெறவே, கடுமையாக போராடி வருகின்றனர். மத்திய அரசு, ஏற்றுமதியாளர்களின் கோரிக்கையை ஏற்று, 'டியூட்டி டிராபேக்' சலுகையை உயர்த்தி அறிவித்துள்ளது.
இருப்பினும், பிரிட்டன் நாட்டுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம், வங்கதேச ஆடை இறக்குமதிக்கு கட்டுப்பாடு, கொரோனா தொற்றுகால அவசரக்கால கடன் போன்ற திட்டம் என, பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கின்றனர்.
ஆலோசனை கூட்டம்
பிப்., மாதம் தாக்கல் செய்ய உள்ள, 2024 -25ம் ஆண்டுக்கான பட்ஜெட், எதிர்பார்ப்பு நிறைந்ததாக மாறியுள்ளது. விரைவில், லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட இருப்பதால், அதற்கு முந்தைய இடைக்கால பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகவும் வாய்ப்புள்ளது.
புதிய அரசு பொறுப்பேற்றதும், முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்; எனவே, தேர்தல்கால பட்ஜெட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தொழில் அமைப்பு நிர்வாகிகளுடன், பட்ஜெட் தயாரிப்பு ஆலோசனை கூட்டம் விரைவில் நடக்க உள்ளது.
அதற்காக, திருப்பூர் பின்னலாடை தொழில் துறையினர், ஒட்டுமொத்த தொழில் வளர்ச்சிக்கு தேவையான கோரிக்கைகளை முன்வைக்க தயாராகி வருகின்றனர். ஒவ்வொரு அமைப்பினரும், எதிர்பார்க்கும் பட்ஜெட் அறிவிப்பு தொடர்பான கோரிக்கை மனுவையும், மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்பி வைக்க தயாராகி வருகின்றனர்.
பிரிட்டன் நாட்டுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம், வங்கதேச ஆடை இறக்குமதிக்கு கட்டுப்பாடு, கொரோனா தொற்றுகால அவசரக்கால கடன் போன்ற திட்டம் என, பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் தொழில் துறையினர் காத்திருக்கின்றனர்