/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தொழில் சிறப்பதற்கு மத்திய பட்ஜெட் கைகொடுக்கும்: பின்னலாடை துறையினர் உற்சாகம்
/
தொழில் சிறப்பதற்கு மத்திய பட்ஜெட் கைகொடுக்கும்: பின்னலாடை துறையினர் உற்சாகம்
தொழில் சிறப்பதற்கு மத்திய பட்ஜெட் கைகொடுக்கும்: பின்னலாடை துறையினர் உற்சாகம்
தொழில் சிறப்பதற்கு மத்திய பட்ஜெட் கைகொடுக்கும்: பின்னலாடை துறையினர் உற்சாகம்
UPDATED : பிப் 02, 2026 07:20 AM
ADDED : பிப் 02, 2026 04:45 AM

திருப்பூர்: ''மத்திய பட்ஜெட், ஜவுளித்துறையின் எதிர்கால வளர்ச்சிக்கான திட்டமிடல்'' என்று தொழில்துறையினர் வரவேற்றுள்ளனர்.
மத்திய பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். திருப்பூர் பின்னலாடைத் துறையினருக்கு, இந்த பட்ஜெட் பலனளிக்கும் என்று பின்னலாடைத்துறையினர் வரவேற்றுள்ளனர்.
கட்டமைப்புக்கு பயன்
சண்முகசுந்தரம், தலைவர், தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம்(சைமா): மத்திய பட்ஜெட், கட்டுக்கோப்பான வளர்ச்சிக்கானது; பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும். நடைமுறைக்கு ஏற்ப வரி சீர்திருத்தம் நடந்துள்ளது. விபத்து காப்பீட்டு தொகைக்கு வரிவிலக்கு வரவேற்புக்குரியது. குறு, சிறு தொழில்களுக்கு, 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது, புதிய உத்வேகம் அளிக்கும். நகர்ப்புற பொருளாதார மண்டலங்களுக்கான 5,000 கோடி ரூபாய் திருப்பூர் உள்கட்டமைப்பு வசதிக்காக பயனளிக்க வாய்ப்புள்ளது. 'சமர்த் -2.0' திட்டம் தொழிலாளர் தட்டுப்பாட்டை நீக்க உதவியாக இருக்கும். சிறந்த உள்கட்டமைப்பு மற்றும் தொழில் மூலதனம் என, ஒரு தொழிலை இயக்குவதற்கான ஹார்டுவேர் வசதிகளை இந்த பட்ஜெட் வழங்கியுள்ளது. மத்திய அரசு, வருமானவரி சட்ட பிரிவு 43 பி (எச்) திருத்தத்தை மறுபரிசீலனை செய்து, அனைவருக்கும் பொதுவான கடன் கால அவகாசத்தை நிர்ணயிக்க வேண்டும்.
கன்டெய்னர் உற்பத்தி
இளங்கோவன், தலைவர், அனைத்து ஜவுளி ஏற்றுமதி முகமைகள் கூட்டமைப்பு:
கடந்த சில ஆண்டுகள் முன், கன்டெய்னர் தட்டுப்பாடு ஏற்பட்டதால், ஏற்றுமதி பொருட்களை உரிய நேரத்தில் அனுப்பி வைக்க இயலவில்லை. அதிக விலை கொடுத்து, விமானத்தில் அனுப்ப வேண்டியிருந்தது. துறைமுக சரக்கு முனையத்தில் சரக்கு அதிக நாட்கள் தேங்கியிருந்தது. அதற்கு தீர்வு காணும் வகையில், கன்டெய்னர் உற்பத்தி செய்ய 10 ஆயிரம் கோடி ரூபாயில் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், துறைமுகங்களில் சரக்கு கையாள்வது எளிதாகும். கப்பலில் சரக்கு அனுப்புவதில் ஏற்பட்டு வரும் இடர்பாடுகளும் தீரும். பல்வேறு வகை, பயன்தரும் அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
ரூ.10 ஆயிரம் கோடி
காந்திராஜன், தலைவர், திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்கம்:
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை வருங்கால சாம்பியன்களாக உருவாக்க, சிறப்பு நிதியாக, 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்க இருப்பதும் வரவேற்புக்குரியது. திருப்பூரை பொறுத்தவரை 90 சதவீதம் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இருப்பதால், அதிகம் பயன்பெற வாய்ப்பு கிடைக்கும். 'சமர்த் 2.0' திட்டத்தால், பயிற்சி பெற்ற தொழிலாளர்களை உருவாக்கலாம்.
ஜவுளி மண்டலங்கள்
விவேகானந்தன், தலைவர், தென்னிந்திய இறக்குமதி இயந்திர பின்னலாடை துணி உற்பத்தியாளர் சங்கம்(சிம்கா):
பட்ஜெட் அறிவிப்பின் மூலம், வங்கதேசத்தக்கு போட்டியாக திருப்பூர் உருவெடுக்க முடியும். புதிய பூங்கா திட்டங்களால், புதிய ஜவுளி மண்டலங்கள் தமிழகத்துக்குள் வரும் வாய்ப்பு உள்ளது. பழைய இயந்திரங்களுக்கு பதிலாக, நவீன தொழில்நுட்ப இயந்திரம் வாங்க மூலதன மானியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வரவேற்கிறோம். 'சமர்த்-2.0' திட்டத்தால், லட்சக்கணக்கான தொழிலாளர் வருவர். காஞ்சிபுரம், ஆரணி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு, மகாத்மா காந்தி கிராம ஸ்வராஜ் திட்டம் கைகொடுக்கும்.
புதிய சீர்திருத்தம்
ஸ்ரீதர், மாவட்ட தலைவர், லகு உத்யோக் பாரதி:
இளைஞர் சக்தியையும், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் போட்டித்திறனை மேம்படுத்தும் வண்ணம் அமைந்துள்ளது. உலகளாவிய சந்தைகளின் மாறுபாடுகளை எதிர்கொள்ளும் திறனை ஊக்குவிக்கும் வண்ணம் இருக்கிறது.
மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் நீண்டகால பார்வை எனலாம். மத்திய அரசு 350க்கும் மேற்பட்ட புதிய சீர்திருத்தங்களை ஜி.எஸ்.டி., தொழிலாளர் நலன், தர நிர்ணய கட்டுப்பாடு என்று பல்வேறு விஷயங்களில் ஏற்படுத்தியுள்ளது; அந்த சீர்திருத்தங்கள் மக்களுக்கும், தொழில் துறையினருக்கும் நீண்ட காலப் பலன் அளிக்கும் வகையில் பட்ஜெட் அமைந்துள்ளது.
வளர்ச்சிக்கு அச்சாரம்
கோபாலகிருஷ்ணன், தலைவர், கம்ப்யூட்டர் எம்ப்ராய்டர்ஸ் அசோசியேஷன்:
அமெரிக்க வரி உயர்வால், பின்னலாடை தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஐரோப்பாவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு நிம்மதியாக இருக்கிறது. அடுத்த நான்கு மாதங்களில், பெரிய மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது. 'ஜாப் ஒர்க்' நிறுவனங்களிலும் நல்ல மாற்றம் கிடைக்கும். மத்திய பட்ஜெட்டில், குறு,சிறு தொழில்களுக்கு அதிக நிதி ஒதுக்கியுள்ளது. புதிய வகை மெஷின் இறக்குமதிக்கு மீண்டும் மானியம் வழங்க வேண்டும். குறைந்தவட்டியில் கடன் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். பட்ஜெட் அறிவிப்பால் திருப்பூர் புதிய வளர்ச்சியை பெறும்.
பிணையில்லா கடன்
அண்ணாதுரை, ஒருங்கிணைப்பாளர், திருப்பூர் தொழில் பாதுகாப்பு குழு:
மத்திய பட்ஜெட்டில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சிக்காக, 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது, சரியான நேரத்தில் பயனளிக்கும். அமெரிக்காவுக்கு மாற்றாக, ஐரோப்பிய ஒப்பந்தம் வாயிலாக, 27 நாடுகளுடன் புதிய வர்த்தகம் செய்ய இந்த உதவி பேருதவியாக இருக்கும். குறிப்பாக, 4000 கோடி ரூபாய் அளவுக்கு பிணையில்லா கடன் வழங்கும் அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.; தொழில்கள் புத்துயிர் பெறும்.
தொழிற்பூங்கா திட்டம்
அழகிய மணவாளன், ஏற்றுமதி வர்த்தக ஆலோசகர்:
மொத்தம், 200 தொழிற்பேட்டைகளை புத்தாக்கம் செய்யும் திட்டம், மூலம் திருப்பூர் பயன்பெறும். குறைந்தவிலை விளையாட்டு உபகரணங்கள் உற்பத்தி திட்டம் மூலம் ஜவுளிப்பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் விளையாட்டு காலணிகள், பொருட்கள் உற்பத்தி செய்யக்கூடிய நிறுவனங்கள் பலன் பெறும். ஒருங்கிணைந்த ஜவுளி திட்டம் - தமிழகத்தின் தற்போதைய அதிக மின் கட்டணம் உற்பத்தி செலவை அதிகரித்துள்ளது.
புதிய தொழிற்பூங்காக்கள் அமைக்கப்பெற்றால் கூட்டாக மின் கொள்முதல் செய்வதன் மூலம் தற்போதைய சவால்களை நிவர்த்தி செய்ய முயலலாம். கன்டெய்னர் உற்பத்தி தொழிலை ஊக்குவிக்கும். சரக்கு அனுப்புதலில் ஏற்பட்ட இடர்பாடுகள் குறையும். மகளிர் சுய உதவி குழு என்பது, மகளிர் சுய தொழில்முனைவோர் என்று மாற்றம் செய்து, 'ஷீ-மார்ட்' என்ற புதிய திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏமாற்றம் அமெரிக்க வரி உயர்வு பாதிப்புக்கு நிவாரணம் வழங்கும் எவ்வித அறிவிப்பும் இல்லை; பின்னலாடை தொழிலுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்காக, 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியது மிகவும் குறைவு. புதிய தொழில்முனைவோருக்கான அறிவிப்பு எதுவும் இல்லை. ஜவுளி பூங்கா அறிவிப்பால், குறு, சிறு தொழில்கள் பயன்பெறுவதில்லை. ஜவுளித் தொழிலில் அதிகமாக ஈடுபடும், குறு, சிறு நிறுவனங்களுக்கான அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.
அமெரிக்க ஏற்றுமதியாளருக்கு சரியான அறிவிப்பு இல்லாததும் ஏமாற்றம் தருகிறது. பஞ்சு உள்ளிட்ட மூலப்பொருளுக்கான இறக்குமதி வரி, 11 சதவீதத்தை தள்ளுபடி செய்யாததும் வருத்தம் அளிக்கிறது.
- முத்துரத்தினம், தலைவர், திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கம்(டீமா).
மகிழ்ச்சி புதிய அறிவிப்பு இல்லாதது போல் தோன்றினாலும், ஏராளமான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. தேசிய நார் திட்டத்தால், பட்டு, பருத்தி உற்பத்தி மட்டுமல்லாது, செயற்கை நுாலிழை உற்பத்தியும் பயன்பெறும்.
புதிய தொழில் துவக்கம், வேலை வாய்ப்பு உருவாக்கம், ஜவுளித்துறை விரிவாக்கம், புதிய தொழில்நுட்ப இயந்திரம் நிறுவுதல், கைத்தறி மற்றும் கைவினை பொருட்கள் திட்டத்தாலும், சுற்றுச்சூழலை பாதுகாக்காத ஜவுளி திட்டத்தாலும், திருப்பூரின் ஜவுளி உற்பத்தி மேம்படும்; புதிய வாய்ப்புகளை பெறும்.
- ராஜா சண்முகம், முன்னாள் தலைவர், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம்.

