UPDATED : செப் 28, 2026 05:48 PM
ADDED : செப் 28, 2026 04:52 PM
உடுமலை: ஆர்.கே.ஆர்., வீதியில் பாதாளச்சாக்கடை இணைப்புக்காக தோண்டப்பட்ட குழியை மூடாததால், வாகன ஓட்டுநர்கள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.
உடுமலை பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, ஆர்.கே.ஆர்., வீதி அமைந்துள்ளது. பல்லடம் மற்றும் தாராபுரம் மாநில நெடுஞ்சாலைகளை இணைக்கும் பிரதான ரோடாகவும், இந்த வீதி உள்ளது.
வணிக நிறுவனங்கள் செயல்படும் பகுதியாக உள்ளதால், கனரக வாகன போக்குவரத்தும் அதிகமிருக்கும். இந்த வீதியில் பாதாளச்சாக்கடை இணைப்புக்காக ரோட்டின் குறுக்கே குழி தோண்டப்பட்டது.
ஆளிறங்கு குழி மூடி அமைத்து இணைப்பு வழங்கிய பிறகும், குழியை மூடவில்லை. 'பேட்ஜ்' ஓர்க்கும் செய்யவில்லை. இதனால், குழியில் இருசக்கர வாகன ஓட்டுநர்கள் நிலைதடுமாறி கீழே விழுகின்றனர்.
வாகனங்களின் சக்கரங்கள் சிக்கிக்கொள்ளும் அளவுக்கு குழி விரிவடைந்து வருகிறது. 'ரோட்டுக்கு நடுவே அகழியாகவும், நவீன வேகத்தடையாகவும் அந்த குழி மாறியுள்ளது,' என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
நகராட்சி நிர்வாகம் உடனடியாக சீரமைப்பு பணிகளை செய்து, விபத்துகளை தவிர்க்க வேண்டும்.
