/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பராமரிப்பு இல்லாத கிராம தடுப்பணைகள் மழை நீர் சேகரிப்பு கேள்விக்குறி
/
பராமரிப்பு இல்லாத கிராம தடுப்பணைகள் மழை நீர் சேகரிப்பு கேள்விக்குறி
பராமரிப்பு இல்லாத கிராம தடுப்பணைகள் மழை நீர் சேகரிப்பு கேள்விக்குறி
பராமரிப்பு இல்லாத கிராம தடுப்பணைகள் மழை நீர் சேகரிப்பு கேள்விக்குறி
ADDED : அக் 29, 2025 12:10 AM

உடுமலை: உடுமலை பகுதியில், கிராம மழை நீர் ஓடைகளின் குறுக்கே, தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட தடுப்பணைகள் பராமரிப்பின்றி உள்ளதால், மழை நீரை சேகரிக்க முடியாமல் வீணாகி வருகிறது.
உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரங்களில், விவசாயத்துக்கு ஆதாரமாக வடகிழக்கு பருவமழை உள்ளது.
இந்த சீசனில் அதிக மழைப்பொழிவு கிடைப்பதால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, கிணறு மற்றும் போர்வெல்கள் வாயிலாக விவசாய சாகுபடி மேற்கொள்ளப்படும். இந்த சீசனில் மட்டும் தான், கிராமங்களிலுள்ள மழை நீர் ஓடைகளில் நீர்வரத்து இருக்கும்.
மழை நீரை தேக்கி சேகரித்து வைப்பதால், சுற்றுப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இத்தகைய அடிப்படை காரணத்துக்காக, மூன்று ஒன்றியங்களிலும், 200க்கும் மேற்பட்ட சிறிய தடுப்பணைகள் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டன.
அவற்றை முறையாக பராமரிக்க, ஊராட்சி, ஒன்றிய நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. பெரும்பாலான தடுப்பணைகளில், சுவர் இடிந்துள்ளது; நீர் தேங்கும் பகுதி மண் மேடாக உள்ளது. ஓடைகளும் புதர் மண்டி, நீரோட்டம் திசை மாறி விளைநிலங்களுக்குள் வீணாகச்செல்கிறது.
கடந்த சில நாட்களாக, உடுமலை சுற்றுப்பகுதியில் பரவலாக மழை பெய்து, ஓடைகளில் நீர்வரத்து உள்ளது. ஆனால் பராமரிப்பில்லாத தடுப்பணைகளில் தண்ணீர் தேங்கவில்லை.
விவசாயிகள் கூறியதாவது: பல்வேறு அரசு திட்டங்களின் கீழ் கட்டப்பட்ட தடுப்பணைகளில் தண்ணீர் தேங்குவதில்லை. அதிகாரிகள் அலட்சியத்தால், அரசு ஒதுக்கும் நிதியும், திட்ட நோக்கமும் வீணாகியுள்ளது.
மூன்று ஒன்றியங்களிலும் தடுப்பணைகள் நிலை குறித்து ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். வடகிழக்கு பருவமழை சீசனில்,மழை நீரை சேகரிக்காவிட்டால், வரும் கோடை காலத்தில் நிலத்தடி நீர்மட்டம் சரிந்து, சாகுபடி கேள்விக்குறியாகி விடும். இவ்வாறு, தெரிவித்தனர்.

