/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உழவர் சந்தை ரோட்டில் குறையாத நெரிசல் அனைத்து தரப்பினரும் பாதிப்பு
/
உழவர் சந்தை ரோட்டில் குறையாத நெரிசல் அனைத்து தரப்பினரும் பாதிப்பு
உழவர் சந்தை ரோட்டில் குறையாத நெரிசல் அனைத்து தரப்பினரும் பாதிப்பு
உழவர் சந்தை ரோட்டில் குறையாத நெரிசல் அனைத்து தரப்பினரும் பாதிப்பு
ADDED : பிப் 16, 2024 09:01 PM
உடுமலை:உடுமலை உழவர் சந்தை முன்புள்ள, ரோட்டில் இருபுறங்களிலும், அதிகரித்துள்ள தற்காலிக ஆக்கிரமிப்புகளால், ரோட்டில், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், விவசாயிகளும் பாதிக்கின்றனர்.
உடுமலை உழவர் சந்தையில், 70க்கும் மேற்பட்ட கடைகளில், நாள்தோறும், 20 டன்னுக்கும் அதிகமான காய்கறிகள் விற்பனையாகிறது. சுற்றுப்பகுதியைச்சேர்ந்த கிராம விவசாயிகளும், நகர நுகர்வோரும் அதிகளவு பயன்பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், உழவர் சந்தையின் வெளிப்புறத்தில், ரோட்டை ஆக்கிரமித்து, அதிகளவு கடைகள் அமைக்கப்படுகின்றன.
உடுமலை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து பிரியும், கபூர்கான் வீதியில், உழவர் சந்தை அமைந்துள்ளது. திருமூர்த்திமலை, அமராவதி உட்பட பல்வேறு பகுதிகளுக்கு, அனைத்து வாகனங்களும், இந்த ரோடு வழியாகவே செல்ல வேண்டும்.
காலை நேரங்களில், ரோட்டின் இருபுறங்களிலும், கடைகள் செயல்படுவதால், அவ்வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியாமல், போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது.
கடைக்கு காய்கறி வாங்க வருபவர்களும், வாகனங்களை தாறுமாறாக நிறுத்தி விட்டு செல்கின்றனர். இப்பிரச்னையால், வாகன ஓட்டுநர்கள் விபத்துக்குள்ளாகின்றனர்.
மேலும், உழவர் சந்தைக்குள் காய்கறி விற்கும், விவசாயிகளும், விற்பனை குறைந்து பாதிக்கின்றனர்.
எனவே, நெடுஞ்சாலைத்துறையினர், வேளாண் விற்பனை வாரியத்தினர், நகராட்சி நிர்வாகத்தினர் இணைந்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி, போக்குவரத்தை சீராக்க வேண்டும். விவசாயிகளையும், பாதிப்பிலிருந்து மீட்க எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதே போல், இரவு நேரங்களிலும், உழவர் சந்தை முன், தள்ளுவண்டி கடைகள் அமைத்து வியாபாரம் செய்கின்றனர். கடை முன், வாகனங்களை தாறுமாறாக நிறுத்துவதால், இரவு, 7:00 மணி முதல், 10:00 மணி வரையும் அப்பகுதியில், நெரிசல் நிலவுகிறது.
அருகிலுள்ள, சந்திப்பு பகுதியிலும் தற்காலிக ஆக்கிரமிப்புகளால், விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.