ADDED : ஏப் 09, 2025 11:33 PM
அனுப்பர்பாளையம்; திருப்பூர் மாநகராட்சி முதலாவது மண்டல கூட்டம் தலைவர் உமாமகேஸ்வரி தலைமையில் நடந்தது. உதவி கமிஷனர் கணேசன், முன்னிலை வகித்தார்.
கவுன்சிலர்கள் பேசியதாவது:
சகுந்தலா(அ.தி.மு.க.,) : குடிநீர் 8 நாட்களுக்கு ஒரு முறையே வினியோகிக்கப்படுகிறது. எங்கள் வீதியில் அறுவை சிகிச்சைக்காக 11 நாய்களை பிடித்து சென்றனர். அறுவை சிகிச்சை முடிந்து 11 நாய்களுக்கு பதிலாக 15 நாய்களை விட்டு சென்றுள்ளனர்.
நாகராஜ், (ம.தி.மு.க) : பாதாள சாக்கடை பணி சரியாக செய்யவில்லை. மின் வாரியத்திற்கு பணம் கட்டியும் தெருவிளக்கு பொருத்துவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.
குணசேகரன், (பா.ஜ) : தெரு விளக்குகளை விரைவில் பொருத்தவில்லை என்றால் பொதுமக்களை திரட்டி சாலை மறியலில் ஈடுபடுவோம். குப்பை சரியாக எடுப்பதில்லை. குப்பை எடுப்பதில் ஊழல் நடக்கிறது.
தலைவர்: 26 வது வார்டு பெரியது; சுகாதார அலுவலர் பார்வையிட்டு சுகாதார பிரச்னையை தீர்க்க வேண்டும்.
தங்கராஜ், (அ.தி.மு.க.,) : ஞாயிறன்று சூறைக்காற்று 70 மரங்கள் சாய்ந்தன. அப்புறப்படுத்தப்படாமல் உள்ளன. பாட்டையப்பன் நகரில் குடிநீர் கசிவு மூன்று மாதங்களாக சீர் செய்யப்படாமல் உள்ளது. சப்பை தண்ணீர் மோட்டார் பழுதாகி இரண்டு மாதங்களாகிறது. இன்னும் சரி செய்யப்படவில்லை.
ரவிச்சந்திரன், (இ.கம்யூ): குப்பை பிரச்னை நீடிக்கிறது. பாதாள சாக்கடை இணைப்பிற்கு 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை வாங்குகின்றனர். முறையான கட்டணம் எவ்வளவு என்பதை கூற வேண்டும்.
செல்வராஜ், (இ.கம்யூ) : ஒரு பெண் துாய்மை பணியாளருக்கு நாள் ஒன்றுக்கு 550 ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும். ஆனால் 360 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது.
இவ்வாறு, விவாதம் நடந்தது.

