/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பரிதாப நிலையில் உப்பாறு ஓடை! மீட்க தேவை நடவடிக்கை
/
பரிதாப நிலையில் உப்பாறு ஓடை! மீட்க தேவை நடவடிக்கை
பரிதாப நிலையில் உப்பாறு ஓடை! மீட்க தேவை நடவடிக்கை
பரிதாப நிலையில் உப்பாறு ஓடை! மீட்க தேவை நடவடிக்கை
ADDED : டிச 24, 2025 06:42 AM
உடுமலை: நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்கும், மழை நீர் ஓடை, சீமை கருவேல மரங்களால், சூழப்பட்டு, கழிவு நீர் ஓடையாக மாறியும், அரசுத்துறைகள் நடவடிக்கை எடுக்காமல், அலட்சியம் காட்டுவது விவசாயிகளை வேதனையடையச்செய்துள்ளது.
குடிமங்கலம் ஒன்றியத்தில், 22 ஆயிரத்து 100 ெஹக்டேரில், விவசாய சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. நிரந்தர நீரோட்டம் உள்ள நீராதாரங்கள் எதுவும் இப்பகுதியில் இல்லை.
எனவே, மழைக்காலங்களில் மட்டும் நீரோட்டம் இருக்கும் மழை நீர் ஓடைகளே, நிலத்தடி நீர் மட்டத்துக்கும், விவசாயத்துக்கும் ஆதாரமாக உள்ளன.
குறிப்பாக, பல்வேறு கிராமங்களில் உருவாகும் மழை நீர் ஓடைகள், ஒருங்கிணைந்து உப்பாறு ஓடையாக மாறி, தாராபுரம் பகுதியிலுள்ள அணையோடு இணைகிறது.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த உப்பாறு ஓடை, பல்வேறு காரணங்களால், படிப்படியாக காணாமல் போய் வருகிறது. குடிமங்கலம் ஒன்றியம், பொட்டையம்பாளையம், அம்மாபட்டி, பெதப்பம்பட்டி வழியாக செல்லும் உப்பாறு ஓடையின் குறுக்கே, 10க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.
பல லட்சம் ரூபாய் செலவில், தடுப்பணைகள் கட்டப்பட்டாலும், மழைக்காலத்தில் கூட, நீர் வரத்து கிடைக்காத அளவுக்கு ஓடையின் நிலை உள்ளது. ஓடையின் நீரோட்ட பகுதி முழுவதும், சீமைக்கருவேல மரங்கள் முளைத்து, வனப்பகுதி போல மாறியுள்ளது.
இவ்வகை மரங்களை அகற்ற, அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும், உப்பாறு ஓடையை யாரும் கண்டுகொள்ளவில்லை.
வடகிழக்கு பருவமழைக்காலத்தில், குடிமங்கலம் ஒன்றிய பகுதிக்கு, மழைப்பொழிவு கூடுதலாக இருக்கும். கடந்த மூன்று மாதங்களில் மட்டும், இப்பகுதியில், 200 மி.மீ., க்கும் அதிகமான மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
ஆனால், ஓடையில் நீரோட்டமே இல்லை. ஓடை பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டு, குறுகலாக மாறியுள்ளது. இதனால், மழைக்காலத்தில், அருகிலுள்ள விளைநிலங்களுக்குள், புகுந்து சேதம் ஏற்படுகிறது; தடுப்பணைக்கு தண்ணீர் வருவதில்லை. கழிவு நீரை நேரடியாக ஓடையில் கலக்கின்றனர்.
ஆங்காங்கே தேங்கியுள்ள மழை நீரும் மாசடைந்து, நோய் பரப்பும் நிலையில் காணப்படுகிறது. பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் ஒருங்கிணைந்து, உப்பாறு ஓடையை மீட்க வேண்டும் என, இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

