/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மேம்படுத்தப்படாத மாற்றுத்திறன் குழந்தைகள் மையம் அரசு அக்கறை காட்ட வலியுறுத்தல்
/
மேம்படுத்தப்படாத மாற்றுத்திறன் குழந்தைகள் மையம் அரசு அக்கறை காட்ட வலியுறுத்தல்
மேம்படுத்தப்படாத மாற்றுத்திறன் குழந்தைகள் மையம் அரசு அக்கறை காட்ட வலியுறுத்தல்
மேம்படுத்தப்படாத மாற்றுத்திறன் குழந்தைகள் மையம் அரசு அக்கறை காட்ட வலியுறுத்தல்
ADDED : ஜன 11, 2025 09:36 AM
உடுமலை : மாற்றுத்திறன் குழந்தைகளை பராமரிக்கும் பகல் நேர பாதுகாப்பு மையங்களை மேம்படுத்துவதற்கு, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒவ்வொரு மாவட்டத்திலும், பள்ளி செல்லும் வயதில் உள்ள மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை பராமரிக்க, பகல் நேர பாதுகாப்பு மையங்கள் செயல்படுகின்றன. திருப்பூர் மாவட்டத்தில், 13 வட்டாரங்களிலும் இம்மையங்கள் செயல்படுகின்றன.
இவற்றில், 5 முதல் 18 வயது வரை பள்ளி செல்ல முடியாமல் உள்ள மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் பராமரிக்கப்படுகின்றனர். மத்திய மற்றும் மாநில அரசின் சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இந்த மையங்களுக்கு, குழந்தைகளை அழைத்து வருவதற்கான போக்குவரத்துக்கு மாதந்தோறும் குறிப்பிட்ட தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தொகை வழங்குவதிலும் தாமதம் ஏற்படுகிறது.
முன்பு, மையத்துக்கு வரும் குழந்தைகளை அழைத்து வருவதற்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது அதுவும் இல்லாததால், பெற்றோரின் சுய முயற்சியால் அழைத்து வரவேண்டியுள்ளது.
அதேபோல் குழந்தைகளுக்கு, பல்வேறு சத்துள்ள சிற்றுண்டிகளும் வழங்கப்பட்டன. கடந்த சில ஆண்டுகளாக அதற்கும் வாய்ப்பில்லை.
குழந்தைகளின் உடல் குறைபாடுகளை மேம்படுத்த, 'பிசியோதெரபி', சிகிச்சைக்கான பயிற்சியாளர்கள் பணியிடமும் கடந்த இரண்டாண்டுகளாக காலியாக உள்ளது.
'ஆட்டிசம்', போன்ற மனம் மற்றும் மூளை செயல்பாடுகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கென சிறப்பு தளவாடங்கள் இந்த மையங்களில் இல்லை.
மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கும், இந்த மையத்தின் வாயிலாக கல்வி கிடைக்கும் வாழ்க்கையில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையோடு, பெற்றோர் இம்மையத்தில் விடுகின்றனர்.
இந்நிலையில் குழந்தைகளின் திறன்களை வெளிப்படுத்தி, அவர்களுக்கான வசதிகளை செய்து தர அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால், நம்பிக்கை இழந்து வருகின்றனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கான தினத்தை சிறப்பாக கொண்டாட அறிவிக்கும் அரசு, அந்த குழந்தைகளுக்கான மையங்களின் அடிப்படை தேவைகளிலும் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பது பெற்றோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
பெற்றோர் கூறியதாவது:
குழந்தைகளுக்கு இங்குள்ள பயிற்சியாளர்கள் கல்வி கற்கவும், பேசவும், படிக்கவும் கற்றுத்தருகின்றனர். ஆனால் அவர்களின் உடல்நலனை மேம்படுத்தும் வகையில் பயிற்சி அளிப்பதற்கு எந்த வசதியும் இல்லை.
அரசு இந்த மாற்றுத்திறன் மையங்கள் மீதும், தெய்வத்தின் குழந்தைகளாக அழைக்கப்படும் இவர்கள் மீதும் கூடுதல் அக்கறை காட்ட வேண்டும். எங்கள் குழந்தைகளும் சாதாரணமாக பள்ளி சென்று படிக்க வேண்டுமென எதிர்பார்த்துதான் இங்கு விடுகிறோம்.
அரசு இதற்கு முக்கியத்துவம் அளித்து மையத்தை மேம்படுத்தி, நவீன தொழில்நுட்ப வசதிகளை வழங்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.