ADDED : ஏப் 24, 2026 08:13 PM
உடுமலை: உடுமலை ராஜேந்திரா ரோட்டில் காணப்படும் ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலையில் பிரதான ரோடுகளாக, தளி ரோடு, பொள்ளாச்சி ரோடு, பழநி ரோடு, திருப்பூர் ரோடு, கல்பனா ரோடு, ராஜேந்திரா ரோடு போன்றவை உள்ளன. இதில், ராஜேந்திரா ரோடும் போக்குவரத்து நிறைந்ததாக உள்ளது.
இந்த ரோட்டில் நகராட்சி சந்தை, அரசு மேல்நிலைப்பள்ளி, வணிக நிறுவனங்கள், ரயில்வே ஸ்டேஷன், கடைகள், அமைந்துள்ளன. நகரின் ராமசாமி நகர், ஜீவா நகர் உட்பட பகுதிகளுக்கு இந்த ரோட்டை வாகன ஓட்டுனர்கள் பயன்படுத்துகின்றனர்.
இதனால், இங்கு போக்குவரத்து அதிகளவில் காணப்படும். போக்குவரத்து பிரச்னை இந்த ரோட்டில் செல்லும் வாகன ஓட்டுனர்களுக்கு தீராத தலைவலியாக உள்ளது.
மேலும், இந்த ரோட்டில், தள்ளுவண்டிகள், கடைகளின் ஆக்கிரமிப்புகளால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பிற வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. அவ்வப்போது சிறு விபத்துகளும் ஏற்படுகின்றன. பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
இதுகுறித்து பல முறை நகராட்சிக்கு மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, நகராட்சியினரும், போலீசாரும் இணைந்து, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியறுத்தியுள்ளனர்.
