/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள்; நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
/
சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள்; நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள்; நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள்; நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
ADDED : ஜன 10, 2026 07:38 AM
உடுமலை: மடத்துக்குளம் தாலுகாவில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில், விதி மீறி செயல்படும் தென்னை நார் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
மடத்துக்குளம் தாலுகாவில், அமராவதி மற்றும் பி.ஏ.பி., பாசனத்தின் கீழ், தென்னை, கரும்பு, நெல், மக்காச்சோளம், காய்கறி பயிர்கள் என விவசாயம் பிரதானமாக உள்ளது.
இப்பகுதிகளில், மைவாடி, சோழமாதேவி, ஜோத்தம்பட்டி, வேடபட்டி, காரத்தொழுவு, துங்காவி, பாப்பான்குளம் கிராமங்களில், தென்னை நார் தொழிற்சாலைகள் உரிய அனுமதியின்றியும், மாசு கட்டுப்பாட்டு வாரிய விதிமுறைகளை பின்பற்றாமலும், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில், விதிகளுக்கு புறம்பாக செயல்பட்டு வருகிறது.
நேரடியாக நிலத்தில் தென்னை நார் கழிவுகளை துாய்மைப்படுத்துவதோடு, திறந்த வெளி , ஓடைகளில் கழிவு நீர் வெளியேற்றுவதால், பாசன கட்டமைப்புகள் மற்றும் நிலத்தடி நீர் மாசுபடுகிறது. பல கிணறுகள், ஆழ்துளை கிணறுகளில் நீர் மாசுபட்டுள்ளதால், கால்நடைகளுக்கு கூட குடிநீருக்கு பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறியுள்ளது.
நிலத்தடி நீர் மாசுபடுவதால், காய்கறி, நெல் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படுவதோடு, தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் துாசு காரணமாக, பயிர்கள் பாதிக்கின்றன.
கடந்த, 5ம் தேதி, கோட்டாட்சியர் தலைமையில் நடந்த கூட்டத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் பங்கேற்று, விதிகளை பின்பற்றாமல் இயங்கிய, ஆறு தென்னை நார் தொழிற்சாலைகள் இயங்க தடை விதிக்கப்பட்டது.
மற்ற கிராமங்களில் இயங்கி வரும், தென்னை நார் தொழிற்சாலைகளில் உள்ளாட்சி அமைப்புகள், வருவாய்த்துறை உள்ளிட்ட அதிகாரிகளை கொண்டு, ஆய்வு செய்து, உரிய பாதுகாப்பு விதிகளை பின்பற்றாத ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
எனவே, விவசாய நிலங்களை பாழ்படுத்தும் வகையில், விதிகளை மீறி செயல்படும் தென்னை நார் தொழிற்சாலைகள் மீதும், கழிவுகளை விவசாய நிலங்களில் கொட்டி, அபரிமிதமான தண்ணீர் அடித்து, அருகிலுள்ள விவசாய நிலங்களை பாழ்படுத்தும் தொழிற்சாலைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது தொடர்பாக, மடத்துக்குளம் தாசில்தார், ஒன்றிய அதிகாரிகளிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், தாலுகா தலைவர் ராஜரத்தினம், செயலாளர் வீரப்பன், பொருளாளர் வெள்ளிங்கிரி மற்றும் நிர்வாகிகள் மனு அளித்தனர்.

