/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிராமங்களில் அதிகரிக்கும் பிளாஸ்டிக் பயன்பாடு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
/
கிராமங்களில் அதிகரிக்கும் பிளாஸ்டிக் பயன்பாடு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
கிராமங்களில் அதிகரிக்கும் பிளாஸ்டிக் பயன்பாடு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
கிராமங்களில் அதிகரிக்கும் பிளாஸ்டிக் பயன்பாடு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
ADDED : மே 12, 2025 11:17 PM
உடுமலை, ; கிராமப்புற வணிகக்கடைகளிலும், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனை குறித்து, ஒன்றிய நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருப்பதால், சுற்றுச்சூழல் சீர்கேடு அதிகரிக்கிறது.
தற்போது, நகரம் மற்றும் கிராமங்களில், துணிப்பை பயன்படுத்துவது குறைந்து வருகிறது. பிளாஸ்டிக் பை மற்றும் அது சம்பந்தமான பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், உடுமலை நகரில், 40 மைக்ரான் குறைவாக உள்ள பிளாஸ்டிக் பை மற்றும் டம்ளர்களை கடைகளில் விற்கவும், பயன்படுத்தவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதனால், நகரப்பகுதியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு, அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கின்றனர்.
ஆனால், உடுமலை சுற்றுப்பகுதி கிராமங்களில், இதுபோன்ற கட்டுப்பாடுகள் இல்லாததால், பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளது. இறைச்சிக்கடைகள், மளிகை பொருட்கள் விற்கும் சிறிய வணிக கடைகளிலும், மைக்ரான் குறைவாக உள்ள பைகளையே பயன்படுத்துகின்றனர்.
மதுக்கடைகளில், மைக்ரான் குறைவான டம்ளர்களை வைத்துள்ளனர். கிராமப்பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில், மக்காத குப்பையை மறுசுழற்சி செய்வதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை.
இதனால் நீர்நிலைகளும், திறந்த வெளியும் குப்பைக்கழிவுகளை குவிக்கும் இடமாகவே மாறி விட்டன. மேலும் இதனால் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது.
ஊராட்சிகளின் குடியிருப்புகளில் உள்ள கழிவுகளை அப்புறப்படுத்தி, ஊரின் எல்லையில் இருக்கும் நீர்நிலைகளில் குவிப்பது தான், தற்போதைய திடக்கழிவு மேலாண்மை திட்டமாக உள்ளது.
இதற்கு அடிப்படை காரணமாக இருக்கும், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க ஒன்றிய நிர்வாகமும் தீவிர நடவடிக்கை எதுவும் மேற்கொள்வதில்லை. இதனால் நகரில் விற்பனை இல்லாவிட்டாலும், கிராமங்களில் பிளாஸ்டிக் பைகளின் விற்பனை தொடர்கிறது.
ஊராட்சிகளில் உள்ள சிறிய வணிகக்கடைகள், மதுக்கடைகள் மற்றும் இதர கடைகளில், மைக்ரான் குறைவான பிளாஸ்டிக் பை மற்றும் டம்ளர்கள் பயன்படுத்துவதை தடை செய்து, ஒன்றியம் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுப்பதனால் மட்டுமே, சுற்றுசூழல் சீர்கேட்டை தவிர்க்க முடியுமென சுற்றுசூழல் பாதுகாப்பு அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
இது சம்பந்தமாக, தமிழக அரசும், சுகாதாரத்துறை அதிகாரிகளும், பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கம் வகையில், தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.