ADDED : ஜன 16, 2024 02:45 AM
''பொங்கல் பண்டிகயை குடும்பமாக, பாரம்பரிய முறைப்படி கொண்டாட வேண்டும். அப்போது தான் மகிழ்ச்சி பொங்கும், '' எழுத்தாளர் ஆதலையூர் சூரியகுமார் கூறினார்.
பொங்கல் பண்டிகையின் சிறப்புகள் குறித்து, கோவை, பாரதியார் பல்கலை ஆட்சிப் பேரவை உறுப்பினர் எழுத்தாளர் ஆதலையூர் சூரியகுமார் கூறியதாவது:
காலங்கள் தோறும் நாம் கொண்டாடும் பொங்கல் பண்டிகையின் வடிவங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. இனிவரும் காலங்களில் செயற்கை நுண்ணறிவின் காரணமாக நம் வீட்டு கூடத்தில் திடீரென்று இரண்டு பொங்கல் பானைகளை உருவாக்கி கூடவே, இரண்டு கரும்புகளையும் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி பொங்கல் வைத்து ஆடியோவில் 'பொங்கலோ பொங்கல்' என்று ஒலி எழுப்பி ரிமோட்டை ஆப் செய்து வைத்து விடுவது கூட பொங்கல் பண்டிகையாக மாறிவிடலாம்.
நாகரிக காலம், நகர்ப்புற வாழ்க்கை என்ற காரணங்களை சொல்லிக்கொண்டு ஸ்டவ் அடுப்பில் பொங்கல் வைத்து கொண்டாடியதன் அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சியாக செயற்கை நுண்ணறிவு பொங்கல் இருக்கலாம். ஆனால், வீடுகளை சாணமிட்டு மெழுகி மாக்கோலம் இட்டு, உறவுகள் ஒன்று கூடி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறதோ அதுவே ஆனந்தப் பொங்கல்.
மார்கழியின் மகிமை
'மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்' என்று கிருஷ்ண பரமாத்மா கூறியிருக்கிறார். அப்படி ஒரு புனிதமான மாதமாக இது அமைந்திருக்கிறது. கடுமையான குளிர் போர்த்திய காலைப் பொழுதில் குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு, வீட்டில் விளக்கேற்றி வைத்து, புதிய பூக்களை கொண்டு வழிபடுவது அதீத நன்மைகளைத் தருகிறது.
அதுபோலவே இன்னொரு அறிவியல் சிந்தனையும் உண்டு. ஆண்டின் இரு அயணங்களில் உத்தராயணம் துவங்குவது தான் தை மாத பிறப்பு. மார்கழி மாதத்தில் இறைவனை மட்டும் வணங்குவதற்காக தள்ளிப் போட்டு இருந்த, தடை செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிகளுக்கு தை மாத பிறப்பு தொடர்ந்து வழி கொடுக்கிறது. சூரியன் வடக்கு திசையில் வடக்கு முகமாக பயணிக்க தொடங்குகிறது.
மகர சங்கராந்தி
இதனை ஒட்டி சூரியனுக்கு செய்யப்படும் பூஜை மகர சங்கராந்தி எனப்படுகிறது. சங்கரமனம் என்றால் நகரத் தொடங்குதல் என்று அர்த்தம். சூரியன் எந்த நாளில் வடக்கு முகமாக நகர தொடங்குகிறதோ அந்த நாளே மகர சங்கராந்தி.
உழவர்கள் தங்களுடைய தொழிலுக்கு உற்ற துணையாக இருந்த சூரியன், கால்நடைகள், தொழிலாளர்கள் ஆகியோர்களுக்கு நன்றி தெரிவிக்க பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என்ற மூன்று பேரும் விழாக்களைக் கொண்டாடுகிறார்கள்.
பொங்கல் படையலில் இடம் பெறும் மஞ்சள் கொத்து மங்களத்தை குறிக்கிறது. கரும்பு இன்பத்தை குறிக்கிறது. இஞ்சிக் கொத்து காரமானது, வெற்றிலை பாக்கு துவர்ப்பைக் குறிக்கிறது.
நிலத்திற்கு மேலும் கீழும் செடி, கொடி, மரம் என்று அனைத்து தாவரங்களிலும் கிடைக்கும் காய்கறிகள் படையலில் இடம்பெறுகின்றன. கடவுள் நமக்குக் கொடுத்த பொருளை நாம் மீண்டும் அவனுக்கே படைத்து நன்றி தெரிவிப்பது பொங்கல் பண்டிகையின் மற்றுமொரு சிறப்பு.
காணும் பொங்கல்
கன்னிப் பொங்கல் அன்று இளம் பெண்கள் கூட்டம் கூட்டமாக கூடி களத்து மேட்டிற்கோ ஆற்றங்கரைக்கோ செல்வார்கள். அங்கே மனம் விரும்பியபடி ஆடிப்பாடி மகிழ்கிறார்கள். அந்த காலத்தில் பெண்கள் வீட்டை விட்டு வெளியே போக மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு பொது இடத்தில் கூடிய விளையாட ஒரு வாய்ப்பு, இந்த கன்னிப் பொங்கல். இவ்வாறு அவர் கூறினார்.