/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மண் அகல் விளக்குகளை பயன்படுத்துங்க! தொழிலாளர்கள் கோரிக்கை
/
மண் அகல் விளக்குகளை பயன்படுத்துங்க! தொழிலாளர்கள் கோரிக்கை
மண் அகல் விளக்குகளை பயன்படுத்துங்க! தொழிலாளர்கள் கோரிக்கை
மண் அகல் விளக்குகளை பயன்படுத்துங்க! தொழிலாளர்கள் கோரிக்கை
ADDED : டிச 04, 2024 09:57 PM

உடுமலை; 'பல்வேறு சிரமங்களை தாண்டி உற்பத்தி செய்யப்படும் மண் அகல் விளக்குகளை, திருவிழா காலங்களில் மக்கள் வாங்கி பயன்படுத்த வேண்டும்,' என மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடுமலை புக்குளம், பூளவாடி, ஜல்லிபட்டி, சாளையூர் உள்ளிட்ட பல கிராமங்களில், பாரம்பரியமாக, அகல் விளக்கு, மண்பானை உற்பத்தியில், 25க்கும் அதிகமான குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
கார்த்திகை தீப திருவிழாவையொட்டி அகல் விளக்குகள் விற்பனையால், கிடைக்கும் வருவாய், தொழிலாளர்களின் முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது.
இந்த சீசனை இலக்காக வைத்து, முன்னதாகவே உற்பத்தியை துவக்குவது வழக்கம். இந்தாண்டு, உற்பத்திக்கு தேவையான குளத்து மண் குறித்த நேரத்தில், கிடைக்கவில்லை.
மண்ணை விலைக்கு வாங்கி உற்பத்தியை துவக்கும் போது, மழை பெய்யத்துவங்கியது. இதனால், அகல் விளக்குகளை காய வைத்து விற்பனைக்கு தயார்படுத்துவது தாமதமானது.
எனவே, கார்த்திகை தீப திருவிழாவுக்கு குறைந்த நாட்களே உள்ள நிலையில், அகல் விளக்கு உற்பத்தி பணிகளை தொழிலாளர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
பல போராட்டங்களுக்கு இடையே, குடும்பத்தினர் அனைவரும் ஈடுபட்டு தயாரிக்கும் அகல் விளக்கு விற்பனையிலும், குறைந்த வருவாயே அவர்களுக்கு கிடைத்து வருகிறது. இதனால், பல குடும்பத்தினர் மாற்றுத்தொழிலுக்கு சென்று விட்டனர்.
அத்தொழிலாளர்கள் கூறியதாவது: அகல் விளக்கு மற்றும் மண்பானை உற்பத்தியில், பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகிறோம். குறிப்பாக, மூலப்பொருளான குளத்து மண் எடுக்க போராட வேண்டியுள்ளது.
இந்தாண்டு மழையால், உற்பத்தி பாதிக்கப்பட்டது. பல்வேறு சிரமங்களை கடந்து, தயாரிக்கும் மண் அகல் விளக்குகளை, மக்கள் வாங்கி ஆதரவு வழங்க வேண்டும். பீங்கான் பூச்சு உடைய விளக்குகள் வருகைக்கு பிறகு, மண் அகல் விளக்குகள் அதிகளவு விற்பனையாவதில்லை.
திருவிழா காலங்களில், மண்ணால் தயாரிக்கப்படும் பொருட்களை விற்பனை செய்ய நகரங்களில், இடம் வழங்கி தமிழக அரசு உதவ வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.