/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குறுகிய கால நெல் ரக விதையை பயன்படுத்துங்க! வேளாண் கருத்தரங்கில் அறிவுரை
/
குறுகிய கால நெல் ரக விதையை பயன்படுத்துங்க! வேளாண் கருத்தரங்கில் அறிவுரை
குறுகிய கால நெல் ரக விதையை பயன்படுத்துங்க! வேளாண் கருத்தரங்கில் அறிவுரை
குறுகிய கால நெல் ரக விதையை பயன்படுத்துங்க! வேளாண் கருத்தரங்கில் அறிவுரை
ADDED : ஜூன் 23, 2025 11:05 PM

உடுமலை; குறுவை நெல் சாகுபடிக்கு விவசாயிகள், குறுகிய கால ரக நெல் விதைகளை பயன்படுத்த வேண்டும் என, வேளாண்துறை கருத்தரங்களில் அறிவுறுத்தப்பட்டது.
அமராவதி பழைய ஆயக்கட்டு பாசன பகுதிகளில் நெல் சாகுபடி துவங்கியுள்ள நிலையில், வேளாண் துறை சார்பில் குறுவை நெல் சாகுபடி விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
உடுமலை அருகேயுள்ள கல்லாபுரத்தில் வேளாண் துறை சார்பில், விதைப்பு முதல் அறுவடை வரை நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த, குறுவை நெல் சாகுபடி விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சுந்தரவடிவேல் தலைமை வகித்தார்.
பொங்கலுார் கே.வி.ஏ., விஞ்ஞானி துக்கையண்ணன், வேளாண் உதவி இயக்குனர் தேவி, வேளாண் அலுவலர் அமல்ராஜ் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.
இதில் அதிகாரிகள் பேசியதாவது: குறுவை நெல் சாகுபடிக்கு விவசாயிகள், குறுகிய கால ரக நெல் விதைகளை பயன்படுத்த வேண்டும். நெல் நடவுக்கு முன், நிலத்தில் நன்கு பரம்பு ஓட்டி, சமப்படுத்த வேண்டும்.
இதனால், நீர், உரம் ஒரு பகுதியில் தேங்கி, களை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்க முடியும்.
நிலத்தில் உயிர்ச்சத்துக்கள் வாழ, கரிமச்சத்தை அதிகரிக்கும் வகையில், சணப்பை, தக்கைபூண்டு உள்ளிட்ட பசுந்தாள் உரங்களை, சாகுபடிக்கு முன் பயிரிட்டு, மடக்கி உழவு செய்தால், மண் வளம் பெருகும்.
பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். பயிர்களுக்கு தேவையான, தழைச்சத்து, அசோஸ்பைரில்லம் வாயிலாகவும், மணிச்சத்து, பாஸ்போ பாக்டீரியா வாயிலாக என உயிர் உரங்கள் வாயிலாக நேரடியாக பயிர்களுக்கு வழங்கும் போது, அவற்றுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும்.
வேளாண் துறையில் மானிய விலையில் வழங்கப்படுகிறது. இவை, மண்ணில் கரிமச்சத்தை நிலை நிறுத்தி, பயிர்களுக்கு வழங்குகின்றன. களைக்கொல்லி பயன்பாட்டிலும், அதிக கவனம் இருக்க வேண்டும்.
நடவு செய்த, 3 நாட்களில், அதாவது, நெல்லில், 2 முதல், 3 இலை உருவாகும் போது, முன் முனைப்பு களைகொல்லி முறையாக, தேவையான அளவு மட்டும், அடிக்க வேண்டும்.
சாகுபடி தொழில் நுட்பங்களை கடைபிடித்து, விவசாயிகள் அதிக மகசூல் பெற வேண்டும். வேளாண் துறை ஆலோசனை பெற்று, அதற்கு ஏற்ப, உரம், மருந்துகள் கொடுக்க வேண்டும்.
பாய் நாற்றங்கால் முறையில், இயந்திர நடவு மேற்கொள்ள விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு, 4 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. அதே போல், உயிர் உரங்கள், நுண்ணுாட்ட உரங்கள் மற்றும் விதைகள் மானிய விலையில் வழங்கப்படுகிறது. இதனை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு, பேசினர்.