/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வி.ஏ.ஓ. - உதவியாளர் மீது புகார்களை அடுக்கி 'தர்ணா'
/
வி.ஏ.ஓ. - உதவியாளர் மீது புகார்களை அடுக்கி 'தர்ணா'
வி.ஏ.ஓ. - உதவியாளர் மீது புகார்களை அடுக்கி 'தர்ணா'
வி.ஏ.ஓ. - உதவியாளர் மீது புகார்களை அடுக்கி 'தர்ணா'
ADDED : நவ 22, 2025 06:40 AM

பல்லடம்: பல்லடம் தாலுகா, மாதப்பூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்துக்கு, பல்வேறு பணிகளுக்காக வந்த பொதுமக்கள் பலர், வி.ஏ.ஓ., வருகைக்காக நீண்ட நேரம் காத்திருந்தனர்.
பல மணி நேரம் ஆகியும் வி.ஏ.ஓ. மற்றும் உதவியாளரும் வராமல், அலுவலகம் பூட்டியே கிடந்தது. இதனால், ஆவேசம் அடைந்த பொதுமக்கள், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, வி.ஏ.ஓ. மற்றும் அவரது உதவியாளர் மீது அடுக்கடுக்கான புகார்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
பொதுமக்கள் கூறியதாவது:
மாதப்பூர் வி.ஏ.ஓ. சாமிநாதன் மற்றும் உதவியாளர் சிவராஜ் ஆகியோர், மக்களிடம் நடந்து கொள்ளும் விதம் சரியில்லை. தங்களுக்கு சாதகமான ஆட்களுக்கு உடனே வேலை செய்து கொடுக்கின்றனர். எங்களை கண்டு கொள்வதே இல்லை. எப்போது வந்தாலும் அலுவலகம் பூட்டியே கிடக்கிறது.
தொடர்பு கொண்டாலும் போனை எடுப்பதில்லை. எங்கு சென்றுள்ளார் என்ற விவரங்களையும் எழுதி வைப்பதில்லை. இடத்தை சப்-டிவிஷன் செய்ய லஞ்சம் கேட்கின்றனர். வி.ஏ.ஓ.வால் எந்த வேலையும் நடப்பதில்லை. கேள்வி கேட்டால் தாசில்தாரை பாருங்கள் என்கிறார். உதவியாளரும் பொதுமக்களை மதிப்பதில்லை. எனவே, இருவரையும் பணியிடமாற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தர்ணாவில் ஈடுபட்ட பொதுமக்களிடம், இன்ஸ்பெக்டர் மாதையன் மற்றும் ஆர்.ஐ. குமரவேல் ஆகியோர் பேச்சு நடத்தினர்.
இருப்பினும், சமாதானம் அடையாத மக்கள், 'இருவரையும் பணியிடமாற்றம் செய்வதாக தாசில்தார் வந்து உறுதியளித்த பின் செல்கிறோம்,' என்றனர்.
தொடர்ந்து, தாசில்தாரை மொபைல் போனில் தொடர்பு கொண்டார். அதில், 'உரிய நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் உறுதியளித்துள்ளார் என்று கூறினார். இதனை ஏற்று, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

