/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'கேலோ இந்தியா' லோகோவில் வீரமங்கை வேலு நாச்சியார்
/
'கேலோ இந்தியா' லோகோவில் வீரமங்கை வேலு நாச்சியார்
ADDED : ஜன 16, 2024 11:33 PM
திருப்பூர்:ஜன., 19 முதல்., 31ம் தேதி வரை 'கேலோ இந்தியா' விளையாட்டு போட்டி தமிழகத்தில் நடக்கவுள்ளது.
முதல் முறையாக தமிழகத்தில் இப்போட்டி நடத்தப்படுவதால், அது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த, ஒவ்வொரு மாவட்டத்திலும் 'கேலோ இந்தியா' ஒளிபரப்பு வாகனம் பயணித்தது.
திருப்பூர் சிக்கண்ணா கல்லுாரி, ஜெய்வாபாய், நஞ்சப்பா மாநகராட்சி மேல்நிலை பள்ளிக்கு வந்த வாகனத்தை மாவட்ட நிர்வாகம், விளையாட்டுத்துறை, பள்ளிகல்வித்துறை அலுவலர்கள் வரவேற்றனர்.
இதில், அனைவரையும் கவர்ந்தது, வீரமங்கை இலச்சினை (லோகோ) பொம்மை தான். இதனுடன், மொபைல் போனில் செல்பி எடுக்காதவர்களே அரிது.
வீரமங்கை யார்?
ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்து ஆயுதம் ஏந்தி போராடிய இந்தியாவின் முதல்பெண் விடுதலை போராட்ட வீராங்கனை, வேலுநாச்சியார். வாள்வீச்சு, களரி வீச்சு, சிலம்பம், வளரி, குதிரையேற்றம் ஆகியவற்றை கற்றதுடன், மற்றவர்களுக்கும் கடுமையான பயிற்சியளித்தவர்.
சண்டை பயிற்சி, போராட்ட குணமே இவரை வெற்றி நோக்கி பயணிக்க செய்து, சிவகங்கை சீமையை கைப்பற்ற உதவியது. களத்தில் துணிச்சலாகவும், எதிர்த்து நிற்பது யாராக இருந்தாலும் சற்றும் பின்வாங்காத ஒரு போர் 'வீராங்கனையாக' திகழ்ந்தவர், வேலுநாச்சியார்.
பழிவாங்கும் குணம், திட்டம் தீட்டி, இலக்கை அடைய அதற்கேற்ற வகையில், பயிற்சி எடுத்துக் கொள்வது இவரது பழக்கம். வெற்றியை ருசிக்க வேண்டும் என்பதற்காக களத்தில் தலைமை பொறுப்பை தானே ஏற்று வழிநடத்தியவர், வேலுநாச்சியார்.
ஆங்கிலேயர்கள் கால் ஊன்றிய சிவகங்கை மண்ணில், அவர்களுக்கு எதிராக ஒரு படையை திரட்டி, அவர்களை நேரடியாக வென்று, முதன் முதலில் ஆங்கிலேயேரை தோற்கடித்த வீராங்கனை என்ற பெயரை வாங்கியவர்; சிவகங்கை சீமையின் ராணியாக உயர்ந்த, வேலுநாச்சியார்.
வீரமும், துணிச்சலும் நிறைந்த அவர், தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், உருது, சமஸ்கிருதம், ஆங்கில மொழிகளை கற்று அறிந்தவர்.
'விளையாட்டில்வெற்றி நிலையை அடைய இறுதி வரை போராட்ட குணம் வேண்டும். எனவே தான், கேலோ விளையாட்டு போட்டிக்கான இலச்சினையாக அவரது முழு உருவம் வைக்கப்பட்டுள்ளது,' என்கின்றனர், விளையாட்டு ஆர்வலர்கள்.