/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வீரபாண்டி - கோவில்வழி ரோட்டுக்கு விமோசனம் பிறக்கிறது
/
வீரபாண்டி - கோவில்வழி ரோட்டுக்கு விமோசனம் பிறக்கிறது
வீரபாண்டி - கோவில்வழி ரோட்டுக்கு விமோசனம் பிறக்கிறது
வீரபாண்டி - கோவில்வழி ரோட்டுக்கு விமோசனம் பிறக்கிறது
ADDED : மார் 26, 2025 11:26 PM

திருப்பூர்; திருப்பூரில், பல்லடம் ரோட்டிலிருந்து நேரடியாக தாராபுரம் ரோட்டை அடைவதற்கான பிரதான வழித்தடமாக, வீரபாண்டி - கோவில்வழி ரோடு உள்ளது.
நெடுஞ்சாலைத்துறையினர் புதிய தார் ரோடு போட்ட சில வாரங்களிலேயே, மாநகராட்சியின் நான்காவது குடிநீர் திட்ட குழாய் பதிப்பதற்காக, இந்த ரோட்டின் ஒருபகுதி தோண்டப்பட்டது.
குடிநீர் குழாய் பதிக்கப்பட்ட பின்னரும், மூன்று ஆண்டுகளாக, நெடுஞ்சாலைத்துறையோ, மாநகராட்சி நிர்வாகமோ, ரோடு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவில்லை.
20 அடி அகல ரோட்டில், ஒரு பாதி தார் ரோடாகவும், மறுபாதி, தோண்டப்பட்ட நிலையில், குண்டும், குழியுமாக மிக மோசமான நிலையில் காணப்படுகிறது. குறிப்பாக, அய்யம்பாளையம் நால்ரோடு முதல், 3 கி.மீ., துாரத்துக்கு ஆங்காங்கே படுகுழிகளும், ஜல்லி கற்கள் பெயர்ந்தும், மணல் திட்டுக்களாகவும் காணப்படுகிறது.
வீரபாண்டியிலிருந்து கோவில்வழி நோக்கி செல்லும் வாகன ஓட்டிகள், எதிரே வாகனங்கள் வரும்போது, குண்டு, குழிகளில் வாகனங்களை ஏற்றி நிலை தடுமாறுகின்றனர். இதனால், அடிக்கடி விபத்துகள் நடக்கும் ஆபத்தான சாலையாக மாறிவிட்டது.
இந்நிலையில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்சார்பில், வீரபாண்டி - கோவில் வழி ரோட்டை சீரமைக்க வலியுறுத்தி, பாடை கட்டும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. கண் துடைப்பாக, அய்யம்பாளையம் நால் ரோடு பகுதியில் 'பேட்ஜ் ஒர்க்' கும், சில அடி துாரத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடை வரை ஜல்லியும் கொட்டிவிட்டு, நிறுத்திவிட்டனர்.
நேற்று காலை, வீரபாண்டி - கோவில்வழி ரோட்டில், பூங்கா நகர் அருகே, எமதர்மன் பாசக்கயிறு வீசி பாடை கட்டும் போராட்டத்துக்காக, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி தலைமையில், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் திரண்டனர்.
'போராட்டத்துக்கு அனுமதியில்லை; போராடினால் கைது செய்யவேண்டிவரும்' என போலீசார் எச்சரித்தனர். அதனை தொடர்ந்து, மாநகராட்சி அதிகாரிகள் பேசினர். உடனே, ரோட்டை சீரமைப்பதாக கூறினர். பொக்லைன் வரவழைக்கப்பட்டு, ரோட்டோரங்கள் சீர்படுத்தப்பட்டன. ஜல்லி, கிரசர் கலவை போடப்பட்டு, சாலை சமன்படுத்தப்பட்டது.
இதுவரை, 45 விபத்து...
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மேற்கு மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் பரமசிவம் கூறியதாவது:
நெடுஞ்சாலைத்துறை, மூன்று ஆண்டுகளுக்கு முன் சிறப்பான வகையில் தார்சாலை போட்டது. மாநகராட்சி நிர்வாகம், குடிநீர் குழாய் பதிப்பதற்காக சில நாட்களிலேயே, ரோட்டை தோண்டி சின்னாபின்னப்படுத்திவிட்டது. அய்யம்பாளையம் நால்ரோடு பிரிவு முதல் மூன்று கி.மீ., துாரம் ரோடு படுமோசமாக உள்ளது. இந்த வழியாக செல்லும் பெண்கள், பள்ளி குழந்தைகள், தொழிலாளர்கள் தினந்தோறும் விபத்துக்குள்ளாகின்றனர். இந்த ரோட்டில் இதுவரை, 45 விபத்து வழக்குகள் பதிவாகியுள்ளன.
ரோட்டை சீரமைக்க வலியுறுத்தி, மாநகராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும் எந்த பயனுமில்லை. பாடை கட்டும் போராட்டம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, மாநகராட்சி நிர்வாகம் அவசர கதியில் ரோடு சீரமைப்பு பணிகளை துவக்கியுள்ளது. பத்து நாட்களுக்குள் தார் ரோடுபோட்டுக்கொடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.பணிகளை பாதியில் நிறுத்தினால், ரோட்டில் சமைத்து சாப்பிட்டு போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.