/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பொதுமக்களுக்கு காய்கறி, பழச்செடிகள் தொகுப்பு; பயன்பெற தோட்டக்கலைத்துறை அழைப்பு
/
பொதுமக்களுக்கு காய்கறி, பழச்செடிகள் தொகுப்பு; பயன்பெற தோட்டக்கலைத்துறை அழைப்பு
பொதுமக்களுக்கு காய்கறி, பழச்செடிகள் தொகுப்பு; பயன்பெற தோட்டக்கலைத்துறை அழைப்பு
பொதுமக்களுக்கு காய்கறி, பழச்செடிகள் தொகுப்பு; பயன்பெற தோட்டக்கலைத்துறை அழைப்பு
ADDED : ஜூலை 04, 2025 10:09 PM
உடுமலை; தோட்டக்கலைத் துறை வாயிலாக, 100 சதவீதம் மானியத்தில், 6 ஆயிரத்து, 190 காய்கறி, பழச்செடிகள் தொகுப்புகள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் உமாசங்கரி கூறியதாவது:
தோட்டக்கலை துறை வாயிலாக, பழ செடிகள் மற்றும் காய்கறிகள் பயிர் செய்யும் விவசாயிகளுக்கு பல்வேறு மானியத் திட்டங்களை வழங்கி வருகிறது.
தற்போது, பொதுமக்களும் பயன்பெறும் வகையில், காய்கறி விதை தொகுப்புகள் மற்றும் பழ செடிகள் தொகுப்பு, 100 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகிறது.
காய்கறிகள் விதைத்தொகுப்பு
காய்கறிகள், பழங்களின் தினசரி தேவை சராசரியாக ஒரு நபருக்கு, 400 கிராம் ஆகும். ஊட்டச்சத்து மிக்க நஞ்சற்ற காய்கறிகள் கிடைப்பதை உறுதி செய்திடவும், மக்களின் அன்றாட காய்கறி தேவைகளை நிறைவு செய்யவும், வீட்டுத்தோட்டங்களில் காய்கறிகள் வளர்ப்பதை ஊக்குவிக்கப்படுகிறது.
அவ்விதமாக, தக்காளி, கத்தரி, வெண்டை, மிளகாய், கொத்தவரை, கீரை வகைகள் போன்ற ஆறு வகையான காய்கறி விதைகள் அடங்கிய தொகுப்பு, 100 சதவீதம் மானியத்தில் வழங்கப்படும்.
ஒருவருக்கு, அதிகபட்சமாக 2 விதை தொகுப்புகள் வழங்கப்படுகிறது. மடத்துக்குளம் வட்டாரத்திலுள்ள பொதுமக்களுக்கு, 3,845 காய்கறி விதைகள் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
பழச்செடிகள் தொகுப்பு
நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் வசிக்கும் மக்களின் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, விரைவில் பலன் அளிக்கும் பப்பாளி, கொய்யா, எலுமிச்சை ஆகிய மூன்று வகையான பழ செடிகள் அடங்கிய பழச்செடி தொகுப்புகள், நுாறு சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகிறது.
மடத்துக்குளம் வட்டாரத்திற்கு, 2, 345 பழச் செடிகள் தொகுப்பு ஒதுக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட தொகுப்புகளை பெற விரும்பும் பொதுமக்கள், விவசாயிகள் ஆதார் நகல் மட்டும் கொடுக்க வேண்டும்.
மேலும் உழவர் செயலி, tnhorticulture.gov. in என்ற இணைய தளத்திலும் பதிவு செய்து, முன்னுரிமை அடிப்படையில் பெற்றுக்கொள்ளலாம்.
மொபைல் வாயிலாக பதிவு செய்ய விரும்பும் விவசாயிகள், உதவி தோட்டக்கலை அலுவலர்கள், தாமோதரன் 96598 38787; பூவிகா தேவி, 80720 09226 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, தெரிவித்தார்.