/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விகடகவி அழிந்து வரும் கலை; கலைஞர்கள் கவலை
/
விகடகவி அழிந்து வரும் கலை; கலைஞர்கள் கவலை
ADDED : நவ 15, 2024 11:06 PM
திருப்பூர் ; அந்தக்காலத்தில், 'விகடகவி' என்ற பெயரில் கலைஞர்கள் இருந்தனர். அறிவாற்றல் மிகுந்த அவர்கள், அரசவையை அலங்கரித்தனர். மக்களையும் மகிழ்வித்து கொண்டிருந்தனர். ஆனால்... இன்று!
மயில்கள் அகவை, குயில்களின் இனிய கூவல், கிளிகளின் பேச்சு, விலங்குகளின் குரல், நிலக்கரி ரயிலின் பயணம், புயலடிக்கும் மழை என சகலத்தையும் 'விகடகவி' என்ற கலைஞர்கள், குரல் வழியே மக்களின் செவிகளுக்கு விருந்தாக்கினர்.
இன்றையை டிஜிட்டல் யுகத்தில் நடிகர்களின் குரலை மட்டுமே 'மிமிக்ரி' செய்து மக்களை சிரிக்க வைக்கின்றனர். என்னதான், 'மிமிக்ரி' செய்தாலும், ஒரு கட்டத்தில் அவை சலிப்பு தட்டி விடுகிறது. இருப்பினும், இந்த டிஜிட்டல் உலகம், 'மிமிக்ரி' கலைஞர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளக்கிறது என்றே சொல்லாம்.
அவ்வகையில், காங்கயத்தை சேர்ந்த 'மிமிக்ரி' கலைஞர் குமார ராஜசேகரன் இப்படி சொல்கிறார்...
இன்னொருவர் போல், மற்றொருவர் பேசுவது விகடக்கலை. இதிகாசம், விக்ரமாதித்தன் காலத்தில் இருந்து உள்ளது. ஆயகலைகள், 64ல், இது மிகவும் நுட்பமான கலை. ஒரு சத்தமோ, குரலோ, பாடுவது, பேசுவது போன்றவை ஊடுருவி செய்வது. கவனம் சிதறாமல், அதை கூர்ந்து கவனித்து, ஆழ் மனதுக்குள் கொண்டு சென்று பேசுவது.
இக்கலை இயற்கையாக வர வேண்டும். குறிப்பாக, ஆர்வம் வேண்டும், முறையாக பயிற்சி எடுக்க வேண்டும். நமக்கு ஒரு குரல் பிடித்து, கவர வேண்டும். அப்போது தான், நாம் ஊன்றி செல்ல முடியும். இதன் மீதான ஒரு ஆர்வம், பிளஸ் 1 படிக்கும் போது, எனது தமிழாசிரியர் ஒருவர் வாயிலாக உத்வேகம் ஏற்பட்டது.
எனக்கு நடிகர்கள், மிருகங்கள், ஸ்பெஷல் சவுண்ட் என, நுாறு வகையான குரல்கள் தெரியும். இதுவரை, 2,200 நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளேன். இன்றைக்கு டிவி., நிகழ்ச்சி மூலமாக ஏராளமானவர்கள் உள்ளனர்.
எங்களுக்கான வாய்ப்பு, 2008ம் ஆண்டுக்கு பின் குறைய ஆரம்பித்தது. டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்களை, பிரபலமாக நினைத்து அவர்களை மட்டும் கோவில், பள்ளி, கல்லுாரி நிகழ்ச்சிகளில் அழைக்கின்றனர். இந்த கலையை அழியாமல் காக்க, தமிழகத்தில் பல குரல்களில் பேசும் கலைஞர்களை அங்கீகரித்து நிகழ்ச்சிகளில் பங்கேற்க வைத்து பேச வைப்பது, அவர்களுக்கு ஊக்கத்தொகை போன்றவற்றை அரசு வழங்க வேண்டும். அப்போது தான், விகடகவி கலையை காப்பாற்ற முடியும்.

