/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போலீஸ் பாதுகாப்புடன் மதுக்கடை திறப்பு :கிராம மக்கள் கொந்தளிப்பு
/
போலீஸ் பாதுகாப்புடன் மதுக்கடை திறப்பு :கிராம மக்கள் கொந்தளிப்பு
போலீஸ் பாதுகாப்புடன் மதுக்கடை திறப்பு :கிராம மக்கள் கொந்தளிப்பு
போலீஸ் பாதுகாப்புடன் மதுக்கடை திறப்பு :கிராம மக்கள் கொந்தளிப்பு
ADDED : நவ 03, 2025 11:47 PM

உடுமலை:  உடுமலை அருகே பொதுமக்கள் எதிர்ப்பையும் மீறி, போலீஸ் பாதுகாப்புடன் 'டாஸ்மாக்' மதுக்கடை புதிதாக நேற்று திறக்கப்பட்டது; விரக்தியிலுள்ள கிராம மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.
குடிமங்கலம் ஒன்றியம், வாகத்தொழுவு ஊராட்சிக்குட்பட்ட வா.வேலுாரில், கடந்தாண்டு 'டாஸ்மாக்' மதுக்கடை திறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
வா.வேலுார்-வீதம்பட்டி ரோட்டில் மதுக்கடையை துவக்கினால், சுற்றுப்பகுதி கிராமங்களில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து, மதுக்கடை திறப்பு பணிகள் கிடப்பில் போடப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மதுக்கடையை திறப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, வா.வேலுார் சுற்றுப்பகுதி கிராம மக்கள் சம்பவ இடத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிராம இணைப்பு ரோட்டில் அமர்ந்து, அவ்வழியாக சென்ற அரசு பஸ்சை சிறைபிடித்து சாலை மறியலிலும் அவர்கள் ஈடுபட்டனர். சம்பவ இடத்தில் உடுமலை டி.எஸ்.பி., நமச்சிவாயம் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். அப்போது, போலீசாருக்கும், கிராம மக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
கிராம மக்கள் கூறுகையில், 'வா.வேலுாரில் புதிதாக திறக்கப்படும் டாஸ்மாக் மதுக்கடையை சுற்றிலும், குடியிருப்புகள் உள்ளன. பிரதான வழித்தடத்தில், மதுக்கடை திறந்தால் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட எந்த தரப்பினருக்கும் பாதுகாப்பு இருக்காது. பல முறை போராடியும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. தற்போது மதுக்கடையை திறக்க பாதுகாப்பு வழங்குவதற்காக போலீசார் வந்துள்ளது வேதனையளிக்கிறது,' என்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் அப்புறப்படுத்தி விட்டு, மதுக்கடையை திறக்க உதவினர். அப்பகுதியில் மதுக்கடை பாதுகாப்புக்காக, போலீசாரும் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் எதிர்ப்பை மீறி, போலீஸ் பாதுகாப்புடன் மதுக்கடை திறக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, தொடர் போராட்டங்களில் ஈடுபட அப்பகுதி கிராம மக்கள் தீர்மானித்துள்ளனர்.

