/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பஸ் வசதி இல்லாமல் கிராமங்கள் தவிப்பு
/
பஸ் வசதி இல்லாமல் கிராமங்கள் தவிப்பு
ADDED : ஏப் 26, 2025 11:42 PM

பல்லடம்: பல்லடம் வட்டாரத்தில், 6 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். தொழில், வேலை, மருத்துவம், கல்வி, வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காகவும், பொதுமக்கள் அரசு போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர். ஆனால், பல்லடத்தில், கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன் இருந்த பஸ்களின் எண்ணிக்கை தான் தற்போது உள்ளது.
பல்லடம் போக்குவரத்து பணிமனையின் கீழ், 70 பஸ்கள் இயங்கி வருகின்றன. பல்லடத்தின் மக்கள் தொகைக்கு இது போதுமானது அல்ல. கிராமங்களிலும் கூட இன்று மக்கள் தொகை அதிகரித்துள்ளது.
அதுபோல், மத்திய, மாநில அரசுகளின் பல் வேறு திட்டங்கள் வாயிலாக, இணைப்புச் சாலைகள், கிராமச் சாலைகள் அதிகரித்துள்ளன. ஆனால், கிராமப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு போதிய பஸ் வசதி கிடையாது. குக்கிராமங்களில் வசிக்கும் மக்கள் பலர் பஸ் வசதி இன்றி, இன்றளவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இவ்வாறு பல ஆண்டுகளாக பஸ் வசதி இல்லாத கிராமங்கள் இன்றும் உள்ளன. நகர வளர்ச்சி, மக்கள் தொகைப் பெருக்கம் ஆகியவற்றுக்கு ஏற்ப, உரிய ஆய்வு மேற்கொண்டு, அதற்கு ஏற்ப பஸ் போக்குவரத்தை முறைப்படுத்த வேண்டும்.
அரசு போக்குவரத்து கழகம் இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பு.