/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கால்நடைகள் கொண்டு செல்வதில் விதிமுறை மீறல்
/
கால்நடைகள் கொண்டு செல்வதில் விதிமுறை மீறல்
ADDED : மார் 17, 2025 05:59 AM

பல்லடம்; கேரளாவுக்கு கால்நடைகளை வாகனங்களில் கொண்டுசெல்லும்போது, ஐகோர்ட் வகுத்த விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை.
கேரளாவில் இருந்து மாட்டிறைச்சி ஏற்றுமதி பெருமளவு நடக்கிறது. இதற்கு, தமிழகத்தில் இருந்து தான் அதிகப்படியான கால்நடைகள் இறைச்சிக்கு அனுப்பப்படுகின்றன. திருப்பூர் மாவட்டம், பல்லடம் வழியாக கோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் லாரிகளில், எந்தவித விதிமுறையும் பின்பற்றப்படாமல், கால்நடைகள் சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுகின்றன.
கால்நடைகளை லாரிகள் மூலம் கொண்டு செல்லும்போது விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என, சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது. இதன்படி,கால்நடைகள் நிற்க போதுமான இடவசதி, காற்றோட்டம், உணவு, குடிநீர் ஆகியவை வழங்கப்பட வேண்டும்.
அவற்றின் உடல்நிலை ஆரோக்கியமாக உள்ளதா என்பதை மருத்துவ பரிசோதனை செய்த பிறகு லாரிகளில் கொண்டு செல்ல வேண்டும். முறையான ஆவணங்கள் இருந்தால் மட்டுமே கொண்டு செல்ல வேண்டும். ஆனால், விதிமுறைகள் பின்பற்றப்படாமல், கால்நடைகள் இடைவெளி இன்றி, ஒன்றோடொன்று உரசும்படியாக நிறுத்தி வைக்கப்பட்டு, லாரிகள், வேன்களில் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
ஐகோர்ட் உத்தரவையும் மீறி, தேசிய நெடுஞ்சாலை வழியாக பகிரங்கமாக செல்லும் வாகனங்களை, போலீசார் உட்பட அதிகாரிகள் யாரும் கண்டுகொள்வதில்லை.