/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிரதான கால்வாயில் விதிமீறல்; கண்காணிப்பு குழு தேவை
/
பிரதான கால்வாயில் விதிமீறல்; கண்காணிப்பு குழு தேவை
பிரதான கால்வாயில் விதிமீறல்; கண்காணிப்பு குழு தேவை
பிரதான கால்வாயில் விதிமீறல்; கண்காணிப்பு குழு தேவை
ADDED : பிப் 11, 2025 11:35 PM

உடுமலை; உடுமலை அருகே திருமூர்த்தி அணையில் இருந்து, பி.ஏ.பி., பாசனத்துக்குட்பட்ட நிலங்களுக்கு பிரதான கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்படுகிறது.
தற்போது, மூன்றாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் பிரதான கால்வாயில் செல்கிறது. இதில், திருமூர்த்தி அணை அருகே, பிரதான கால்வாயில் அத்துமீறி, சுற்றுலாப்பயணியர் குளிக்கின்றனர்.
வினாடிக்கு, 900 கன அடிக்கும் மேல் தண்ணீர் செல்லும் பிரதான கால்வாயில், நீரின் போக்கும் அதிகமாக இருக்கும். நீச்சல் தெரிந்தவர்களையும் இழுத்து செல்லும் அளவுக்கு நீரின் வேகம் இருக்கும் கால்வாயில் ஆபத்து தெரியாமல் குளிக்கின்றனர்.
குறிப்பாக, பிரதான கால்வாயில் இருந்து, உடுமலை கால்வாய் பிரியும் ஷட்டர் பகுதி திருமூர்த்திமலை ரோட்டின் அருகில் அமைந்துள்ளது. எனவே, சுற்றுலாப்பயணியர் வாகனங்களை ரோட்டில் நிறுத்தி விட்டு, வாய்க்காலில் குளிக்க செல்கின்றனர். இந்த கால்வாயில், தவறி விழுந்து பலர் இறந்துள்ளனர்.
எனவே, பொதுப்பணித்துறையினர் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில், அப்பகுதியில், நீரின் வேகம், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை உட்பட தகவல்களை உள்ளடக்கிய எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும்.
கோடை விடுமுறை சீசனில், பணியாளர்களை நியமித்து, கண்காணிப்பு குழு அமைத்து, குளிப்பவர்களை எச்சரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதே போல், கெடிமேடு, பூசாரிபட்டி போன்ற இடங்களில், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையில், பிரதான கால்வாய் குறுக்கிடுகிறது.
இப்பகுதிகளில், சரக்கு வாகனங்களை நிறுத்தி விட்டு, அங்குள்ள கால்வாய் படிகளின் வழியாக இறங்கி, குளிக்கின்றனர். அப்பகுதிகளிலும் எச்சரிக்கை பலகை வைப்பதுடன், சிறப்பு குழு அமைத்து கண்காணிப்பும் செய்ய வேண்டும்.

