/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வாக்காளர் வரைவு பட்டியல் பார்வையாளர் ஆய்வு
/
வாக்காளர் வரைவு பட்டியல் பார்வையாளர் ஆய்வு
ADDED : டிச 24, 2024 10:14 PM
- நமது நிருபர் -
திருப்பூர் மாவட்டத்தில் எட்டு சட்டசபை தொகுதிகளுக்கான வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டு, கடந்த அக்., 29ம் தேதி முதல் நவ., 28ம் தேதி வரை சுருக்கமுறை திருத்த பணிகள் நடைபெற்றன.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல், வரும் 2026ம் ஆண்டு நடைபெறுகிறது. இதற்காக, அரசியல் கட்சியினரும், தேர்தல் கமிஷனும் தயாராகி வருகின்றனர். இந்நிலையில்,வரும் 2025, ஜன., 1ம் தேதியை தகுதிநாளாக கொண்டு பெயர் சேர்த்தலுக்கான விண்ணப்பங்கள் மற்றும் பெயர் நீக்கம், திருத்தத்துக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. நவம்பர் மாதம் நான்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது.
சுருக்கமுறை திருத்தத்தில், மாவட்டத்திலுள்ள எட்டு தொகுதிகளில், பெயர் சேர்ப்பதற்காக, 33,587 விண்ணப்பங்கள்; நீக்கத்துக்கு 18,019; திருத்தத்துக்காக 30,461விண்ணப்பங்கள் வாக்காளர்களிடமிருந்து பெறப்பட்டன.
ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், வாக்காளர் வீடுவீடாகச்சென்று, விண்ணப்பங்கள் சரிபார்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக காதி மற்றும் கிராம தொழில் வாரிய முதன்மை செயல் அலுவலர் மகேஸ்வரி, திருப்பூர் மாவட்டத்துக்கு வாக்காளர் பட்டியல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூருக்கு வந்த பார்வையாளர், வாக்காளர் விண்ணப்பம் சரிபார்ப்பு பணிகளை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தார். மாநகராட்சி கமிஷனர் ராமமூர்த்தி, டி.ஆர்.ஓ., கார்த்திகேயன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ஜெயராமன், தேர்தல் தாசில்தார் தங்கவேல் உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஆய்வுக்கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மகேஸ்வரி பேசுகையில், ''திருப்பூர் மாவட்டத்திலுள்ள எட்டு சட்டசபை தொகுதிகளில், சுருக்கமுறை திருத்தத்தில் வாக்காளர்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் சரிபார்ப்பு பணி நடைபெற்றுவருகிறது.
இதுவரை, 97 சதவீத கள ஆய்வு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. துறை சார்ந்த அலுவலர்கள், வாக்காளர் இறுதி பட்டியல் வெளியிடுவதற்குள், அனைத்து பணிகளையும் முடிக்கவேண்டும்,'' என்றார்.
இதன் வாயிலாக, புதிய வாக்காளர்கள் ஓட்டுரிமை பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

