ADDED : ஜன 19, 2026 05:46 AM
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் பெறுவது நேற்றுடன் நிறைவு பெற்றது. கடந்த நான்கு நாட்களாக விடுமுறை என்பதால், ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
தேர்தல் கமிஷன், போலி வாக்காளரை களையெடுத்து, செம்மையான வாக்காளர் பட்டியல் தயா ரிக்க களமிறங்கியுள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் கடந்த நவ., 4ல் துவங்கியது.
வீடுதோறும், தலா இரண்டு படிவங்கள் வழங்கி, ஒவ்வொரு வாக்காளரின் விவரங்கள் பெறப்பட்டது. அதன் மூலம் 2002 சிறப்பு திருத்த பட்டியலில் இடம்பெற்ற விவரம் பெறப்பட்டது. இயலாதவர்கள், தற்போதைய விவரத்தை மட்டும் சமர்ப்பித்தனர்.
23 சதவீதம் நீக்கம் வாக்காளர் வரைவு பட்டியல், டிச. 19ம் தேதி வெளியிடப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, எட்டு சட்டசபை தொகுதிகளில், 24 லட்சத்து, 44 ஆயிரத்து, 929 வாக்காளர் இருந்தனர். சிறப்பு திருத்த பணி வாயிலாக, 5,63, 785 வாக்காளர் பெயர் நீக்கப்பட்டுள்ளது.
வரைவு பட்டியலில் தற்போதைய நிலவரப்படி, 18 லட்சத்து, 81 ஆயிரத்து, 144 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். மாவட்டத்தில், 23 சதவீத வாக்காளர் நீக்கப்பட்டது, பரபரப்பாக பேசப்பட்டது.
பெயர் சேர்க்க வாய்ப்பு பின்னர், வாக்காளர் பெயர் சேர்ப்பு, பெயர் நீக்கம் மற்றும் திருத்தம் கோரி விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டன; வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தப்பணிக்கான விண்ணப்பம் பெறுவது, நேற்று மாலை வரை நடந்தது.
வாக்காளர் வசதிக்காக, டிச. 26 , 27ம் தேதிகள், ஜன. 3, 4ம் தேதிகள் என, நான்கு நாட்கள் வாக்காளர் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. மற்ற நாட்களில், ஓட்டுச்சாவடிகளில் இருந்து விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டது. இருப்பினும், வாக்காளர் வசதிக்காக, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கஅறிவுறுத்தப்பட்டது.
4 சிறப்பு முகாம்கள் மாவட்டத்தில், நான்கு நாட்கள் நடந்த சிறப்பு முகாம் வாயிலாக, 18 ஆயிரத்து, 556 வாக்காளர் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர். பெயர் நீக்கம் கோரி, 410 பேரும், திருத்தம் கோரி, 7,180 பேரும் விண்ணப்பித்திருந்தனர். அத்துடன், 'ஆன்லைன்' மூலமாக அதிகப்படியானோர் விண்ணப்பித்துள்ளனர்.
விண்ணப்பம் செய்வதற்கான அவகாசம், நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. கடந்த 15 முதல் தொடர் விடுமுறை என்பதால், 'ஆன்லைன்' மூலமாக மட்டுமே பெயர் சேர்ப்பு, நீக்கம் மற்றும் திருத்தம் கோரி விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டது; தொடர் விடுமுறை காரணமாக, நேரில் விண்ணப்ப படிவம் வாயிலாக விண்ணப்பிக்க வாய்ப்பு குறைந்துவிட்டது.
இறுதி வாக்காளர் பட்டியல்: பிப். 17ம் தேதி வெளியீடு: பொங்கல் தொடர் விடுமுறை வரும் என்பதால், தேவையானவர்கள், முன்கூட்டியே விண்ணப்பிக்க வேண்டுமென, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் மற்றும் கட்சி ஏஜென்ட்கள் மூலம் முன்னறிவிப்பு செய்திருந்தோம். இதனால், சிறப்பு முகாம்களை மக்கள் சரிவர பயன்படுத்தி கொண்டனர். வாக்காளர் பெயர் சேர்ப்பு குறித்து, கட்சியினரின் ஆட்சேபனைகளும் பரிசீலிக்கப்படும். வரும் நான்கு வாரங்களில், விண்ணப்ப படிவங்களை முறையாக பரிசீலித்து, மேல்நடவடிக்கை எடுத்து, வாக்காளர் இறுதி பட்டியல் தயாரிக்கப்படும்; பிப்., 17ம் தேதி வெளியிடப்படும்.
- தேர்தல் பிரிவு அலுவலர்கள்:
வாக்காளராக சேர: மீண்டும் வாய்ப்பு: இந்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி முக்கியத்துவம் பெற்றுள்ளது. சுருக்கமுறை திருத்த பணியின் போது, பெயர் சேர்க்க விண்ணப்பிக்க இயலாதவர்களுக்கு, மீண்டும் ஒரு வாய்ப்பு உள்ளது. இறுதி பட்டியல் வெளியான நாளில் இருந்து, தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் கூட, வேட்புமனு தாக்கல் துவங்கும் நாள் வரை, வாக்காளர் பெயர் சேர்க்க வாய்ப்புள்ளது; ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். புதிதாக சேர்க்கப்படும் வாக்காளர் விவரங்கள் ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும், இணைப்பு வாக்காளர் பட்டியலாக பயன்பாட்டில் இருக்கும் என, தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
