மூத்த குடிமக்களுக்கு ஓட்டுப்பதிவு துவக்கம்!: வீடுகளுக்கு நேரடியாக செல்லும் தேர்தல் குழுவினர்
மூத்த குடிமக்களுக்கு ஓட்டுப்பதிவு துவக்கம்!: வீடுகளுக்கு நேரடியாக செல்லும் தேர்தல் குழுவினர்
UPDATED : ஏப் 13, 2026 07:37 AM
ADDED : ஏப் 13, 2026 05:34 AM

உடுமலை, பொள்ளாச்சி, மடத்துக்குளம், தொகுதியில், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வீடு தேடி சென்று ஓட்டுப்பதிவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று துவங்கிய இப்பணி, நாளை வரை நடக்கிறது.
சட்டசபை தேர்தல் வரும், 23ம் தேதி நடக்கிறது. உடுமலை, மடத்துக்குளம் தொகுதியில், தேர்தல் ஓட்டுப்பதிவிற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன. உடுமலை தொகுதியில், 132 ஓட்டுப்பதிவு மையங்களில், 307 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன.
தற்போது, ஒரு லட்சத்து, 10 ஆயிரத்து, 178 ஆண்கள், ஒரு லட்சத்து, 20 ஆயிரத்து, 771 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர், 27 என, 2 லட்சத்து, 30 ஆயிரத்து, 976 வாக்காளர்கள் உள்ளனர். உடுமலை தொகுதியில், 11 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
மடத்துக்குளம் தொகுதியில், ஒரு லட்சத்து, 3 ஆயிரத்து, 252 ஆண்கள், ஒரு லட்சத்து, 11 ஆயிரத்து, 541 பெண்கள், 16 மூன்றாம் பாலினத்தவர் என, 2 லட்சத்து, 14 ஆயிரத்து, 809 பேர் இடம் பெற்றுள்ளனர்.
வாக்காளர்கள் ஓட்டுப்பதிவு செய்ய, 118 ஓட்டுப்பதிவு மையங்களில், 294 ஓட்டுச்சாவடிகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இத்தொகுதியில்,13 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.இந்நிலையில், 85 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீடுகளில் இருந்தே ஓட்டுப்பதிவு செய்ய தேர்தல் கமிஷன் அனுமதியளித்துள்ளது.
அதன் அடிப்படையில், ஏற்கனவே, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் வாயிலாக, வீட்டிலிருந்தே ஓட்டுப்பதிவு செய்ய விருப்பம் தெரிவித்து படிவம், 12டி, பெறப்பட்டது.
உடுமலை தொகுதியில், 85 வயதிற்கு மேற்பட்ட, 735 பேரும், மாற்றுத்திறனாளிகள், 202 பேர் என, 937 வீட்டிலிருந்தே ஓட்டளிக்க விருப்பம் தெரிவித்தனர்.
நேற்று (12ம் தேதி) முதல், நாளை (14 ம் தேதி) வரை, தேர்தல் அலுவலர்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று ஓட்டுப்பதிவு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இதற்காக, உடுமலை தொகுதியில், தலைமை தேர்தல் அலுவலர், நுண்பார்வையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் என ஏழு பேரை கொண்ட, 27 குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இக்குழுவினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்கு நேரடியாக சென்று ஓட்டுப்பதிவு செய்து வருகின்றனர். இதற்காக, வேட்பாளர்கள் பட்டியல், சின்னம் அடங்கிய ஓட்டுச்சீட்டு, மை, சீல் கட்டை, மறைப்பு அட்டை, ஓட்டுப்பெட்டி, வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட படிவங்களுடன் நேரடியாக வீடுகளுக்கு சென்று, ஓட்டுப்பதிவு செய்து வருகின்றனர்.
அதே போல், மடத்துக்குளம் தொகுதியில், 85 வயதிற்கு மேற்பட்டோர், 678 பேரும், 234 மாற்றுத்திறனாளிகள் என, 912 பேர் வீட்டிலிருந்தே வாக்களிக்க விருப்பம் தெரிவித்திருந்தனர்.
வீடு தேடி சென்று ஓட்டுப்பதிவு செய்ய, இத்தொகுதியில், அதிகாரிகளை கொண்ட, 14 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் நேற்று முதல், ஓட்டுப்பதிவை துவக்கியுள்ளனர்.
அரசியல் கட்சி வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் இருக்கும் நிலையில், முதல் கட்டமாக, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு பிடித்த கட்சி மற்றும் வேட்பாளர்களுக்கு ஓட்டுப்பதிவு செய்துள்ளனர்.
பொள்ளாச்சி பொள்ளாச்சி சட்டசபை தொகுதியில் மொத்தம், 85 வயதுக்கு மேற்பட்டோர், 1,724; மாற்றுத்திறனாளிகள்,1,519 என மொத்தம், 3,243 பேர் உள்ளனர்.
இவர்களில் விருப்பம் உள்ளவர்களுக்கு ஓட்டுப்பதிவு வழங்க அனுமதி அளிக்கும் வகையில், 12டி விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டது. விருப்பம் உள்ளவர்களிடம் பூர்த்தி செய்து விண்ணப்ப படிவம் பெறப்பட்டது.அவை பரிசீலனை செய்ததில், 85 வயதுக்கு மேற்பட்டோர் 746, மாற்றுத்திறனாளிகளில், 254 பேரில், 199 பேர் தகுதியுடையவர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்களுக்கான ஓட்டுப்பதிவு நேற்று துவங்கியது. சப் - கலெக்டர் ராமகிருஷ்ணசாமி, தேர்தல் அதிகாரிகளிடம், ஓட்டுப்பதிவுக்கான ஆவணங்கள், பெட்டிகளை வழங்கி உரிய அறிவுரை வழங்கினார்.
தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
பொள்ளாச்சி தொகுதியில், விருப்பம் தெரிவித்த மாற்றுத்திறனாளிகள், 85வயதுக்கு மேற்பட்டோரில் தகுதி வாய்ந்தவர்களில், மொத்தம், 945 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
மொத்தம், 15 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளது; ஒரு குழுவில் மண்டல அலுவலர், நுண்பார்வையாளர், கிராம நிர்வாக அலுவலர், வீடியோ குழுவினர் உள்பட, ஐந்து பேர் இருப்பர்; வாகனங்கள் தனித்தனியாக வழங்கப்பட்டுள்ளது.
ஓட்டுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் வீடுகளுக்கு சென்று, ரகசிய ஓட்டுப்பதிவு நடத்தி, சீல் வைக்கப்பட்ட பெட்டியில் செலுத்தினர்.
இவ்வாறு, தெரிவித்தனர்.
- - நிருபர் குழு -:
