ADDED : ஜன 18, 2026 05:18 AM
திருப்பூர்: தமிழக சட்டசபை தேர்தல் நெருங்குவதையடுத்து, தேர்தல் கமிஷன் ஆயத்த பணிகளை மேற்கொண்டு வருகிறது.
கடந்த 2024ல் நடந்த லோக்சபா தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், பதிவுகள் அழிக்கப்படாமல், அந்தந்த மாவட்டங்களில், 'ஸ்ட்ராங் ரூமில்' இருப்பு வைக்கப்பட்டிருந்தன. தற்போது, அம்மெஷின்கள், தொழில்நுட்ப குழுவினரால் சரிபார்ப்புக்கு உட்படுத்தப்பட்டு, பழைய தரவுகள் அழிக்கப்பட்டுள்ளன.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டசபை தொகுதிகளில், மொத்தம் 2,822 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. எட்டு தொகுதி களுக்கு, தலா 3,528 பேலட் மற்றும் கன்ட்ரோல் யூனிட்கள்; 3,810 வி.வி. பேட் தேவைப்படுகின்றன.
கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட ஸ்ட்ராங் ரூமில், 5,565 பேலட் யூனிட்; 3,997 கன்ட்ரோல் யூனிட்; 4,295 வி.வி.பேட் அடங்கிய மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் உள்ளன.
லோக்சபா தேர்தலின் போது ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்கள் அகற்றப்பட்டு, லோக்சபா தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் அழிக்கப்பட்டுள்ளன. பழைய பேட்டரிகள் அகற்றப்பட்டு, புதிய பேட்டரிகள் பொருத்தப்பட்டு, சட்டசபைதேர்தலுக்கு தயார்படுத்தப்பட்டுள்ளன.
முதல்நிலை சரிபார்ப்பு முடிக்கப்பட்ட ஓட்டுப்பதிவு இயந்திரங்களில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில், மாதிரி ஓட்டுப்பதிவு நடத்தி, உறுதி செய்யப்பட்டுள்ளது.
தகுதியான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், தேர்தல் அறிவிப்பு வெளியான பின், ஓட்டுச்சாவடி எண்ணிக்கைக்கு ஏற்ப, கூடுதல் இருப்புடன் சேர்த்து, அந்தந்த சட்டசபை தொகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்படும்; அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கட்டுப்பாட்டில், சட்டசபை தொகுதிகளுக்கான ஸ்ட்ராங் ரூம்களில் வைக்கப்பட்டு, ஓட்டுப்பதிவுக்கு பயன்படுத்தப்படும்.
