/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காத்திருப்பு... அலைக்கழிப்பு கலங்கும் மாற்றுத்திறனாளிகள்
/
காத்திருப்பு... அலைக்கழிப்பு கலங்கும் மாற்றுத்திறனாளிகள்
காத்திருப்பு... அலைக்கழிப்பு கலங்கும் மாற்றுத்திறனாளிகள்
காத்திருப்பு... அலைக்கழிப்பு கலங்கும் மாற்றுத்திறனாளிகள்
ADDED : பிப் 22, 2024 05:30 AM
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், ஈரோடு மாவட்டத்துக்கு கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால், திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெற அலைக்கழிக்கப்படுகின்றனர்.
திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் செயல்படுகிறது. மாற்றுத்திறனாளிகளை பதிவு செய்து அடையாள அட்டை வழங்குவதற்கான மருத்துவ பரிசோதனை முகாம், வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடத்தப்படுகிறது.
கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடத்தப்படும் முகாமில், கண், காது மூக்கு, தொண்டை, மனநலம், எலும்புமுறிவு, நரம்பியல் மருத்துவர்கள் பங்கேற்று, மாற்றுத்திறனாளிகளின் உடல் பாதிப்பை உறுதி செய்கின்றனர். அதனடிப்படையில், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரின் கையொப்பமிட்ட அடையாள அட்டை, வழங்கப்படுகிறது.
அனைத்து மருத்துவர்களும் ஒரே இடத்தில் பார்க்க முடிவதாலும், பரிசோதனை முடிந்தகையோடு அடையாள அட்டை வழங்கப்படுவதாலும், முகாமில் பங்கேற்க, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் ஆர்வம் காட்டுகின்றனர். புதிய அடையாள அட்டை பெறுவதற்காகவும், அட்டையை புதுப்பிப்பதற்காக என, வாரந்தோறும் நடைபெறும் முகாமில் மாற்றுத்திறனாளிகள், 100 பேர் வரை பங்கேற்கின்றனர்.
திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்தராமகுமார், தற்போது, ஈரோடு மாவட்டத்துக்கு கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார்.
முக்கியமான நிகழ்ச்சி நடந்தால், அவர் ஈரோடு சென்று விடுகிறார்; இதனால், திருப்பூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக பணிகள் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக, மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெற, அலைக்கழிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை மருத்துவ முகாமில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகள், அதிகாரியின் கையெழுத்திட்ட புத்தகத்தை பெற, மீண்டும் திங்கள் அல்லது செவ்வாய்கிழமை கலெக்டர் அலுவலகத்துக்கு செல்ல வேண்டியுள்ளது.
அவ்வகையில், 16ம் தேதி நடைபெற்ற முகாமில் மருத்துவ பரிசோதனை முடித்த மாற்றுத்திறனாளிகள் ஏராளமானோர், தங்களுக்கான அடையாள அட்டை பெற, கலெக்டர் அலுவலக தரைதளத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் வரிசையில் காத்திருக்க நேரிட்டது. வீண் அலைச்சலால், மாற்றுத்திறனாளிகளும் அவர்களது குடும்பத்தினரும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரை, ஈரோடு மாவட்ட பொறுப்பிலிருந்து விடுவிக்கவேண்டும் என்பது, மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை.