ADDED : ஜூன் 22, 2025 06:49 AM
கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும், குடியிருப்பு பகுதிகளை இணைக்கும் 'சர்வீஸ்' சாலைகள் உள்ளன. கடந்த ஓரிரு ஆண்டுகளாக, சர்வீஸ் சாலையை ஒட்டி, ஏராளமான கடைகள் உருவாகி வருகின்றன. குறிப்பாக, ஓட்டல்கள், டைல்ஸ் கடைகள், பேக்கரி உள்ளிட்டவை அதிகளவில் உருவாகியுள்ளன.
தேசிய நெடுஞ்சாலையில், தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கும் நிலையில், இளைப்பாறவும், டீ, காபி, சிற்றுண்டி உண்பது, மதியம் மற்றும் இரவு உணவு உண்பது உள்ளிட்டவற்றுக்காக கடைகள் உள்ள இடங்களில், வாகனங்களை, பயணிகள் நிறுத்துகின்றனர். களைப்புடன் வாகனங்களை ஓட்டாமல், சற்றே இளைப்பாறுவதன் வாயிலாக விபத்தில்லாமல் வாகனங்களை ஓட்டி முடியும் என்பது, ஊக்கவிக்கப்பட வேண்டியது தான்.
அதே நேரம், இரவு நேரத்தில், சர்வீஸ் ரோட்டில் உள்ள ஓட்டல்களில் உணவருந்த வரும் வாகன ஓட்டிகள், ஒரு வேளை அந்த ஓட்டல்களில் உணவு தீர்ந்திருந்தாலோ, அல்லது தங்களுக்கு பிடித்தமான உணவு கிடைக்கவில்லை என்ற சூழலில், பைபாஸ் சாலையை நடந்து சென்று தாண்டி, எதிர்புறமுள்ள சர்வீஸ் ரோட்டையொட்டியுள்ள ஓட்டல்களை தேடிச் செல்கின்றனர்.
'பைபாஸ்' ரோட்டில் ஏற்கனவே, அசுர வேகத்தில் வரும் வாகனங்களில் சிலர் அடிபடவும் செய்கின்றனர். இரு நாளுக்கு முன், அவிநாசி பைபாஸ் சாலையில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்தது.
'பைபாஸ் சாலையை நடந்து கடந்து செல்வதென்பது, சாலை விதிப்படி தவறு; அவர்கள் சாலையை கடந்து செல்ல வேண்டுமானால், சர்வீஸ் ரோட்டின் வழியாக தான் செல்ல வேண்டும்' என, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.