ADDED : பிப் 13, 2026 04:59 AM

திருப்பூர்: திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் 'அம்ரூத் பாரத்' திட்டத்தின் கீழ் கட்டணமில்லா காத்திருப்பு ஓய்வறை அமைக்கப்பட்டுள்ளது.
பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், 'அம்ரூத் பாரத்' திட்டத்தின் கீழ் கூடுதல் காத்திருப்பு ஓய்வறை அமைக்க திட்டமிடப்பட்டது. பார்சல் புக்கிங் அலுவலகம் இதற்கு முன் இருந்த இடம் போதிய வசதிகளுடன் இருந்ததால், அவற்றின் கட்டமைப்புகள் மாற்றப்பட்டது.
ஒரே நேரத்தில், நுாறு பயணிகள் வரை பயன்படுத்திக் கொள்ளும் வகையில், பொது பயனாளிகளுக்கு காத்திருப்பு ஓய்வறை புதிதாக கட்டப்பட்டுள்ளது. கூடுதல் கழிப்பிடம், மொபைல் போன் சார்ஜிங், இருக்கை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ரயில்வே ஸ்டேஷன் அதிகாரிகள் கூறுகையில், ''நள்ளிரவு, அதிகாலையில் ரயில் விட்டு இறங்குவோர் வீடுகளுக்கு திரும்ப முடியாமல், விடியும் வரை பிளாட்பார்மில் உறங்குகின்றனர். இதை தவிர்க்க கட்டணமில்லா சாதாரண பொது ஓய்வறை அமைக்கப்பட்டுள்ளது. இதில், 24 மணி நேரமும் பயணிகள் தங்கிக் கொள்ளலாம். ஒரு மாதத்துக்குள் ஓய்வறை திறந்து பயன்பாட்டுக்கு வரும்,' என்றனர்.
