/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தண்டவாளத்தில் 'வாக்கிங்'; ஆபத்தில் பயணியர்
/
தண்டவாளத்தில் 'வாக்கிங்'; ஆபத்தில் பயணியர்
ADDED : ஏப் 21, 2025 06:12 AM

திருப்பூர் : திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் ரயில் விட்டு இறங்குபவர்கள் பிளாட்பார்ம் வழியே பயணிக்காமல், ஆபத்தான தண்டவாளங்களை கடக்கின்றனர். ஆர்.பி.எப்., அதிகாரிகள், ரயில்வே போலீசார் கண்காணிக்காததால், விபத்து ஏற்படும் அபாயகரமான சூழல் உள்ளது.
திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் இரண்டு பிளாட்பார்ம்கள் உள்ளன. ஒரு பிளாட்பார்மில் இருந்து மற்றொரு பிளாட்பார்முக்கு பயணிகள் வர, தலா இரண்டு பாலங்கள், லிப்ட் செயல்படுகிறது.
சிரமத்தை தவிர்க்க, பாலத்தில் பயணிகள் செல்ல வசதியாக, எஸ்கலேட்டரும் இருக்கிறது. ஆனால், ரயில் விட்டு இறங்குவோர் பிளாட்பார்ம் வழியாக நடந்து வெளியேறி செல்லாமல், ஆபத்தான ரயில் தண்டவாளத்தை கடந்து செல்கின்றனர்.
நேற்றுமுன்தினம் கோவை - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் இரண்டாவது பிளாட்பார்ம் வந்து நின்றது. எதிரே முதல் பிளாட்பார்மில் ஈரோடு - பாலக்காடு டவுன் ரயில் வந்தது. இரண்டு ரயிலில் இருந்தும், ரயில்களுக்கு நடுவே (மெயின் டிராக்) காலியாக உள்ள தண்டவாளத்தில் இறங்கி பலர் நடக்க துவங்கினர்.
தினமும் காலை, மாலை பாசஞ்சர் ரயில் வரும் போதெல்லாம், இதுபோன்ற விதிமீறல்கள் சகஜமாக நடக்கிறது. ரயில் விட்டு தண்டவாளத்தில் இறங்கி பெண்கள், வயதானவர்கள், குழந்தைகளுடன் கூட பயமில்லாமல் செல்கின்றனர். பாசஞ்சர் ரயில் 'சப் டிராக்'கில் நின்று கொண்டிருக்கும் போது, திடீரென 'மெயின் டிராக்கில்' ரயில் வந்தால் அசம்பாவிதம் ஏற்படும் சூழல் உருவாக வாய்ப்புள்ளது.
ரயில் விட்டு பிளாட்பார்மில் இறங்கி நடந்து வராமல், தண்டவாளத்தில் இறங்கி வருபவர்களை ரயில்வே போலீசார், ஆர்.பி.எப்., அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. இதனால், தினசரி விதிமீறல் தொடர் கதையாக உள் ளது. விபத்து நேரிடும் முன் கண்காணித்து, விதிமீறுபவர்களை எச்சரிக்க வேண் டும். மீண்டும் தொடர்ந்தால், அபராதம் விதிக்கவும் ரயில்வே போலீசார் முன்வர வேண்டும்.