/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வார்டு விசிட்: தடைபட்ட ஓடை; அடைபட்ட கால்வாய்; 55வது வார்டில் அலங்கோலம்
/
வார்டு விசிட்: தடைபட்ட ஓடை; அடைபட்ட கால்வாய்; 55வது வார்டில் அலங்கோலம்
வார்டு விசிட்: தடைபட்ட ஓடை; அடைபட்ட கால்வாய்; 55வது வார்டில் அலங்கோலம்
வார்டு விசிட்: தடைபட்ட ஓடை; அடைபட்ட கால்வாய்; 55வது வார்டில் அலங்கோலம்
ADDED : ஜூலை 25, 2025 11:26 PM

திருப்பூர் மாநகராட்சி பகுதியில், பனியன் மற்றும் கூலித் தொழிலாளர்கள் நிறைந்த, 55வது வார்டு, வெள்ளியங்காடு, திரு.வி.க., நகர், கோபால் நகர், ஈஸ்வரமூர்த்தி நகர், பெரிச்சிப்பாளையம், டி.எஸ்.கே., நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளை கொண்டிருக்கிறது. கடந்த, உள்ளாட்சி தேர்தல் நிலவரப்படி, 19,680 வாக்காளர்கள் உள்ளனர்.
வார்டில் குடிநீர், தெரு விளக்கு, வீதிகளின் இடையே ரோடு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள், 80 சதவீதம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இருப்பினும், பல்வேறு உட்கட்டமைப்புகள் உருக்குலைந்துள்ளன.
நொய்யல் ஆற்றின் கிளை ஓடையாக உள்ள சங்கிலிப்பள்ளம் ஓடை இந்த வார்டின் இடையே தான் ஓடுகிறது. ஓடையில், மலை போல் குப்பை குவிந்து கிடக்கிறது. மண் மற்றும் நிலத்தடி நீரை மாசுபடுத்தும் பாலிதீன் உள்ளிட்ட தொழிற்சாலை கழிவுகள் குவிந்து கிடக்கின்றன; இதனால், எழும் துர்நாற்றம் முகம் சுளிக்க வைக்கிறது. வார்டுக்குள் மட்டும், 32 கி.மீ., நீளத்துக்கு சாக்கடை இருக்கிறது என துல்லிய கணக்கு சொல்கிறார் வார்டு கவுன்சிலர். ஆனால், சாக்கடையில் அடைபடும் குப்பையை சுத்தம் செய்வதற்கு, வெறும், 6 துாய்மைப்பணியாளர் மட்டுமே உள்ளனர். அதில், ஒருவர் மேஸ்திரி, எஞ்சியவர்களை வைத்து, வார்டின் மொத்த சாக்கடையை சுத்தம் செய்வது சாத்தியமே இல்லை என்கின்றனர் வார்டு மக்கள்.
கிடைக்கும்...
ஆனா, கிடைக்காது
----------------
மாநகராட்சிக்கு சொந்தமாக, சுகாதாரப்பணியாளர்களுக்கென கட்டப்பட்ட 124 வீடுகள் உள்ளன. அவர்கள் யாரும் அங்கு அவர்கள் குடியேறாததால், வெளிநபர்கள் குடியேறினர். துவக்கத்தில், 2 ரூபாய் வாடகைக்கு குடியேறிய அவர்களிடம், தற்போது, 500 ரூபாய் வாடகை வசூலிக்கிறது மாநகராட்சி நிர்வாகம். தங்கள் வீடுகளுக்கு பட்டா கேட்டு போராடி வருகின்றனர், குடியிருப்புவாசிகள். 'வீடும், நிலமும் எங்களுக்கே சொந்தம்; பட்டா கொடுக்க வாய்ப்பே இல்லை' என, கைவிரித்துவிட்டது மாநகராட்சி நிர்வாகம். இருப்பினும், தங்கள் சொந்த செலவில் மராமத்து பணி செய்து, வீடுகளை 'பளிச்' ஆக்கி வருகின்றனர் குடியிருப்புவாசிகள். 'பட்டா பெற்றுத்தருவதாக, தொகுதி எம்.பி., சுப்பராயன் உறுதியளித்திருக்கிறார்' என்கின்றனர் குடியிருப்புவாசிகள்.
ஆக்கிரமிப்பில்
பூமிதான நிலம்?
-------------
வினோபா நகரில் பூமி தான திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட, சுமார் ஒரு ஏக்கர் நிலம் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளது; அந்நிலத்தை மீட்டு, பூங்கா, பள்ளிக்கட்டடம் உள்ளிட்ட பொதுமக்கள் பயன்பாட்டுக்குரியதாக மாற்ற வேண்டும் என்கின்றனர் அப்பகுதி குடியிருப்புவாசிகள். இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகளுக்கு பலமுறை மனு கொடுத்தும், 'உயரதிகாரிகளின் கவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது' என்ற பதில் தான் கீறல் விழுந்த 'ரெக்கார்டு' போன்று திரும்ப, திரும்ப கிடைக்கிறது என்பதும் அவர்களின் ஆதங்கம்.
சகஜமான
கஞ்சா புழக்கம்
-----------------
வேலன் நகர் பாலம் உள்ள பகுதி, இருள் சூழ்ந்திருப்பதால், கஞ்சா பயன்படுத்துவோரின் புகலிடமாக இருக்கிறது. அவர்களால் அவ்வப்போது, சட்டம் ஒழுங்கு சார்ந்த பிரச்னைகளும் எழுகின்றன என்பதும் அப்பகுதி மக்களின் குமுறல். வார்ர்டின் பல இடங்களில் புதர்மண்டியுள்ள இடங்களில் பழைய குப்பைத் தொட்டிகள் பயனற்றதாக கிடக்கிறது. அதே போன்று, புதிதாக மின்கம்பம் பொருத்துவதற்காக அகற்றப்படும் பழைய மின்கம்பங்கள் அங்கேயே கிடக்கின்றன. அவற்றை பழைய இரும்பு கடையில் செலுத்தினால் கூட மாநகராட்சிக்கு வருமானம் கிடைக்கும்.
சாக்கடை கால்வாய்
அவசியம் தேவை
----------
ஈஸ்வரமூர்த்தி நகர், கேம்.எம்.சி., நகர் மற்றும் பிரதான சாலையோரம் சாக்கடை கால்வாய் இல்லாததால், கால்வாயை ஒட்டியுள்ள கட்டடங்கள் இடிந்து, கால்வாயில் அடைப்பு ஏற்படுகிறது. இதனால், மழைக்காலங்களில் சாக்கடை நிரம்ப மழைநீரும், கழிவுநீரும் சாலையில் வழிந்தோடுகிறது. நெருப்பெரிச்சல் பகுதியில், ஒரு வீதியில் உள்ள மக்களுக்கு, 10 நாளுக்கு ஒரு முறையும், அதே வீதியில் மறு பகுதியில் உள்ள மக்களுக்கு, 3 நாளுக்கு ஒரு முறையும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.---