/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆண்டிபாளையம் குளத்தில் கொட்டப்படும் இறைச்சி கழிவு எச்சரிக்கை செய்வது 'வேஸ்ட்' l நடவடிக்கை எடுப்பது 'பெஸ்ட்'
/
ஆண்டிபாளையம் குளத்தில் கொட்டப்படும் இறைச்சி கழிவு எச்சரிக்கை செய்வது 'வேஸ்ட்' l நடவடிக்கை எடுப்பது 'பெஸ்ட்'
ஆண்டிபாளையம் குளத்தில் கொட்டப்படும் இறைச்சி கழிவு எச்சரிக்கை செய்வது 'வேஸ்ட்' l நடவடிக்கை எடுப்பது 'பெஸ்ட்'
ஆண்டிபாளையம் குளத்தில் கொட்டப்படும் இறைச்சி கழிவு எச்சரிக்கை செய்வது 'வேஸ்ட்' l நடவடிக்கை எடுப்பது 'பெஸ்ட்'
ADDED : டிச 03, 2025 07:05 AM

திருப்பூர்: திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் இறைச்சி கழிவுகளை முறையாக அகற்றுவது குறித்து அறிவுறுத்தல் வழங்கியும் பயனில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆண்டிபாளையம் குளத்தின் கரையில் கோழிக்கழிவுகள் கொட்டப்படும் அவலம் தொடர்ந்து நீடிக்கிறது.
திருப்பூர் மாநகராட்சியில் நிலவும் திடக்கழிவு மேலாண்மையில் குப்பை அகற்றும் பிரச்னை பெரிதாகி, பல்வேறு தரப்பில் தொடர் விவாதங்கள், தொடர் போராட்டங்கள், மாற்று ஏற்பாடுக்கான நடவடிக்கை, வழக்கு எனபரபரப்பு நீடிக்கிறது.
இவ்வாறு அடிமேல் அடியாக விழும் நிலையில் மாநகராட்சி நிர்வாகம் நீண்ட காலமாக கிடப்பில் போட்டுக் கிடந்த திடக்கழிவு மேலாண்மை விதிமுறைகள், நடைமுறைகள் என தற்போது துாசு தட்டி அதனை வலியுறுத்தி, அமலுக்கு கொண்டு வரும் முயற்சிகளில் ஆயத்தமாகி வருகிறது.
இதன் ஒரு கட்டமாக கடந்த வாரம், பல்க் வேஸ்ட் உற்பத்தியாளர்களுடன் ஆலோசனை நடத்தி பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக கடந்த மாதம், 25ம் தேதி இறைச்சி கடை உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
பாறைக்குழியில் குப்பை கொட்டும் பிரச்னையில் பெரும் தலைவலியாக இருப்பது இறைச்சிகழிவுகள் என்பது தெரிய வந்த நிலையில், அதை கட்டுப்படுத்தும் வகையில், சில நடவடிக்கைகள்முன்னெடுக்கப்பட்டன.
அன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் இது குறித்த நீண்ட நேரம் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் இறைச்சி கடைக்காரர்கள் தரப்பிலும் சில பிரச்னைகள், சந்தேகங்கள் குறித்து கேள்வி எழுப்பினர்.
அவற்றுக்கு விளக்கம் அளித்த மாநகராட்சி அதிகாரிகள், இறைச்சி கழிவுகளை முறையாக நிர்வாகம் தெரிவிக்கும் வகையில் அகற்ற வேண்டும்; குப்பை தொட்டி, குப்பை வாகனம், ரோட்டோரம், நீர் நிலைப் பகுதிகள் ஆகியவற்றில் கொண்டு கொட்டுதல், தனி நபர்களுக்கு வழங்குதல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தினர்.
அடுத்த நாளே... இந்த ஆலோசனை கூட்டம் நடத்தி அறிவுரைகள் வழங்கிய அடுத்த நாளே, ஆண்டிபாளையம் குளத்தின் கரையில் கோழிக்கழிவுகள் கொண்டு சென்று கொட்டிய அவலம் அரங்கேறியுள்ளது. ஆண்டிபாளையம் குளத்துக்கு மங்கலம் நல்லம்மன் தடுப்பணையிலிருந்து நீர் கொண்டு வரும் வாய்க்கால் அமைந்துள்ள பகுதியில், கோழி இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டுக் கிடக்கிறது.
ஆண்டிபாளையம் குளத்தை பாதுகாக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் மீன் கழிவுகள் வீசுதல்; வாகனங்கள் கழுவுதல் போன்ற அவலங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வந்தன.
பல்வேறு நடவடிக்கைகளால் அவை தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இது போல் கோழி கழிவுகளை கொட்டுவது பெரும் அவதியை ஏற்படுத்தும்.

